செய்திகள்

6 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது வினாத்தாள் முறை அமல்

காலாண்டு தேர்வில் நடைமுறைப்படுத்த முடிவு

சென்னை, ஆக.28-

6 முதல் 12–ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது வினாத்தாள் முறை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள காலாண்டு தேர்வில் இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

6 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவ–மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் இருந்து இதனை அமல்படுத்த திட்டமிட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வந்து சேரும். பின்னர், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றாற்போல், வருகிற 2ந் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 செட் வினாத்தாள்களை தயாரிக்க, தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது வினாத்தாள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில அளவிலான சாதனை ஆய்வில் மாணவ–மாணவிகளின் கற்றல் விளைவு மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்தது. அதற்கான காரணத்தை தீவிரமாக ஆய்வு செய்ததில், மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களின் கற்றல் நோக்கங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் வடிவமைத்தது கண்டறியப்பட்டது. இதனை கருத்தில் கொண்டுதான், தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் முடிவை ஒரே சீராகவும், சரியாகவும் மதிப்பிட முடியும். முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட உள்ளது. தேர்வு நாள் அன்று காலை பள்ளிகளுக்கு வினாத்தாள் இணையதளம் வழியாக அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *