செய்திகள்

6 மாதத்தில் 2 வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்துவதா?

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி

பெங்களூரு, செப். 25–

நவராத்திரி பரிசாக, கர்நாடக அரசு மின் கட்டணத்தை 6 மாதத்தில் 2 வது முறையாக உயர்த்தி உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:–

கர்நாடக மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரிக்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி கர்நாடக பாரதீய ஜனதா அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மக்களுக்கு நவராத்திரி பரிசாக இந்த மின்கட்டண உயர்வை பாரதீய ஜனதா அரசு வழங்கி உள்ளது. மாநிலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்கு உரியதாகும்.

2 முறை உயர்வு

மாநிலத்தில் ஒரு யூனிட்டுக்கு 24 பைசா முதல் 43 பைசா வரை மின் கட்டணத்தை உயர்த்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. அதுவும் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த தினமே, மின் கட்டணத்தை அரசு தந்திரமாக உயர்த்தி இருக்கிறது. அதற்கு முன்பாக உயர்த்தி இருந்தால், சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்பதால், கூட்டத்தொடர் முடிந்ததும் உயர்த்தி இருக்கிறாா்கள்.

கடந்த ஜூலை மாதம் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது நிலக்கரி விலை உயர்வு காரணமாக, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் குமார் கூறி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், அணைகள் நிரம்பி வழிகின்றன. மின் உற்பத்தியும் எந்த பிரச்னையும் இன்றி நடக்கிறது. அப்படி இருந்தும் மின் கொள்முதலுக்கு ரூ.1,244 கோடி அதிகம் செலவாகி இருப்பதாக கூறி கணக்கு காண்பிப்பது, சரியானதா?

பாரதீய ஜனதா அரசு, மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதற்கு பின்னால் சில சந்தேகங்களும் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாட்டோம் என்று மத்திய பாஜக அரசு இருந்து வருகிறது என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *