
அமெரிக்கா: பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் உள்ளிட்ட ஆறு பெண்கள் கொண்ட குழு, ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணத்திற்கு தயாராக உள்ளது. ப்ளூ ஆரிஜின் நிறுவனம், அதன் நியூ ஷெப்பர்ட்-31 ராக்கெட் மூலம் இந்த பயணத்தை மேற்கொள்கிறது.
இந்த பயணத்துக்கான முக்கிய நோக்கம் – விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதாகும். நியூ ஷெப்பர்ட் ராக்கெட், டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். இதில் உள்ள விண்கலம், முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியதாக இருக்கும். அதாவது, விண்கலத்தை இயக்குவதற்கென யாரும் அதில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
விண்வெளிக்குச் செல்லும் இந்த ஆறு பெண்கள்:
*பாப் பாடகி கேட்டி பெர்ரி
*பத்திரிகையாளர் கேல் கிங்
*சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென்
*நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே
*திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின்
* ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலியும், குழுவின் தலைவருமான லாரன் சான்செஸ்
11 நிமிட பயணம்
இந்த விண்வெளிப் பயணம் சுமார் 11 நிமிடங்கள் நீடிக்கும். இதில், பயணிகள் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் உள்ள கார்மன் கோடு வரை செல்லவுள்ளனர். சில நிமிடங்கள் ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையைக் கொண்ட அனுபவத்தை எதிர்கொள்ளும் அவர்கள், விண்வெளியிலிருந்து பூமியின் அழகைக் கண்டு வியக்கும் வாய்ப்பு பெறுவார்கள்.
கார்மன் கோடு என்பது, கடல் மட்டத்திலிருந்து 100 கி.மீ உயரத்தில் உள்ள ஒரு கற்பனை எல்லை. இது புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே வேறுபாட்டைக் குறிக்க இந்த வரம்பை ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் அமைப்பு வரையறுத்துள்ளது.
இந்த பயணம், 1963ஆம் ஆண்டு சோவியத் வீராங்கனை வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்ற பிறகு, முழுக்க பெண்கள் மட்டும் பங்கேற்கும் முதல் விண்வெளிப் பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மைல் கல்லை எட்டும் முன்னர், பாப் பாடகி கேட்டி பெர்ரியின் இசை சுற்றுப்பயணம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த பயணத்தை அதற்கு முன்னதாகவே – ஏப்ரல் 14ஆம் தேதியன்று – திட்டமிட்டு நடத்தியுள்ளது.
விண்வெளி வரலாற்றில் இது புதிய அத்தியாம், பெண்கள் சாதனையின் மற்றுமொரு மைல்கல்!