செய்திகள்

ரூ.78 ஆயிரம் கோடியில் 57 ஆயிரம் பணிகள்: எடப்பாடி அறிவிப்பு

அம்மாவின் ஆட்சி பதவி ஏற்றபின்

ரூ.78 ஆயிரம் கோடியில் 57 ஆயிரம் பணிகள்: எடப்பாடி அறிவிப்பு

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; நீர்நிலைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

சென்னை, பிப்.6

அம்மாவின் ஆட்சி பொறுப்பு ஏற்றபின் ரூ.78 ஆயிரம் கோடியில் 57 ஆயிரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது:

சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 644 அறிவிப்புகளில், 607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 198 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

409 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் பெரும்பாலும் முடிவுறும் தருவாயில் உள்ளன. 31 அறிவிப்புகளுக்கு, திட்டப் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6 அறிவிப்புகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

அதேபோல, டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் 32 மாவட்டங்களில் 568 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 566 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 289 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 277 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 அறிவிப்புகளுக்கான திட்டப் பணி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

57 ஆயிரம் பணிகள் துவக்கம்

அம்மாவின் அரசு பதவியேற்றது முதல் இன்று வரை 42 ஆயிரத்து 144 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 48 ஆயிரத்து 782 பணிகள் என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், 36 ஆயிரத்து 912 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 12 பணிகளுக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 79 ஆயிரத்து 57 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 56 ஆயிரத்து 794 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது இந்த அரசு மக்களின் தேவைகளை நிறைவு செய்ய எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒரு சான்றாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

குடிமராமத்து திட்டம்

சிறு குழந்தையை தாயானவள் கண்ணை இமை காப்பது போல் காத்த செயலும், நீர்நிலைகளை காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

அம்மாவின் அரசு நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், நீர்நிலைகளை தூர்வாரி, புதிய நீர்நிலைகளை உருவாக்கியும், நீர் நிலைகளை, ஒரு தாய் தனது குழந்தையை காப்பதுபோல், பாதுகாத்து வருகின்றது அம்மாவுடைய அரசு.

தமிழ்நாட்டில் வறட்சியினை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் புனரமைக்க பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ‘குடிமராமத்து திட்டம்’ என்ற ஒரு சிறப்பான திட்டம் என்னால் 13.3.2017 அன்று துவக்கப்பட்டு, இன்றுவரை 1,418 கோடி ரூபாய் செலவில் ஏரிகள், வரத்து வாய்க்கால்கள் போன்ற நீர் நிலைகளில் 6,211 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே போன்று கிராம உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் இருக்கின்ற 28,623 நீர்நிலைகள் 422.60 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டன. தூர்வாரும்போது, ஏரிகள் ஆழமாவதுடன், கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாகவும் பயன்படுவதற்கு திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்தி, வெற்றி கண்ட அரசு அம்மாவுடைய அரசு.

மேலும், பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பு அதிகரிக்கப்பட்டு சென்ற ஆண்டு வறட்சிக் காலத்திலும் உணவு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை காலத்தில் பெய்த மழைநீர் அதிக அளவு சேமிக்கப்பட்டு, நீர்நிலைகள் அனைத்தும் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு உணவு உற்பத்தியில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் சாதனை படைக்க உள்ளது.

மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீர் கிடைக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மூன்றாண்டு கால திட்டமாக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நதிகள், ஓடைகள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்று, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 730.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31,834 சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

நதிநீர் இணைப்பு திட்டங்கள்

தமிழ்நாட்டு மக்களின் கனவு திட்டங்களான காவேரி -குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி -கருமேனி ஆறு – நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், மேட்டூர் -சரபங்கா வடிநில நீரேற்றுத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் -குமாரமங்கலத்தில் கதவணை, நஞ்சைப்புகளூரில் காவேரியில் புதிய கதவணைத் திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் என பல்வேறு நீர்வள ஆதார திட்டங்களை நிறைவேற்றி வரும் ஒரே அரசு அம்மாவின் அரசு. தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியன் மூலம் இன்று தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கங்கையை தூய்மைப்படுத்துதல் திட்டத்தைப் போன்று, தமிழ்நாட்டிலுள்ள காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுத்துவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க ‘‘நடந்தாய் வாழி காவேரி” திட்டத்தில் புனரமைக்கும் பணிக்கான முதல்நிலை திட்ட அறிக்கை 10,711 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கக் கோரி, மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியை பெருக்கவும், அதே நேரத்தில் விவசாயிகளின் நலன் காக்கவும், ஒரு விவசாயி தலைமை ஏற்று ஆட்சி நடத்தும், அம்மாவின் அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் காவேரி டெல்டா பகுதியில் அதிகபட்ச குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியில் சாதனை

கடந்த 9 ஆண்டுகளில் ஏழாவது முறையாக மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் டன்னிற்கு அதிகமாக எட்டி சாதனை படைத்துள்ளது அம்மாவுடைய அரசு. அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்த அரசும் அம்மாவுடைய அரசு தான்.

அம்மாவின் அரசு, கடந்த 7 ஆண்டுகளில், 5 முறை கிருஷி கர்மான் விருதினை பெற்று சாதனை படைத்த அரசு அம்மாவுடைய அரசு. விவசாயிகள் தலைவர் மறைந்த சி. நாராயணசாமி நாயுடு ஆற்றிய சிறந்த சேவையை போற்றிப் பாராட்டும் வகையில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைப்பிடித்து, அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக, குடியரசு தின விழாவில் வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு முதல் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது.

பாரம்பரிய நெல் பாதுகாவலர் ‘நெல் ஜெயராமன்’ பெயரில் ‘பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ உருவாக்க நடவடிக்கை எடுத்து, உழவுக்கும், உழவர்களுக்கும் பாடுபட்டவர்களை, தமிழ்நாடு அரசு பெருமை அடைய செய்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.9312 கோடி இழப்பீடு

கடந்த நான்கு ஆண்டுகளில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை, சுமார் 53 லட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 9,312 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நடப்பாண்டிலும் இத்திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், நமது விவசாயிகளின் நலன் கருதி, இணை காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய அணுகுமுறையில் 1,470 கோடி ரூபாய் காப்பீட்டு கட்டணம் மானியமாக ஒப்பளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, 23 லட்சத்து 57 ஆயிரம் விவசாயிகள் சாகுபடி செய்த 39.56 லட்சம் ஏக்கர் பரப்பில் உள்ள பயிர்களை காப்பீடு செய்துள்ளனர்.

நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 3,972 கோடி ரூபாய் மானியங்கள் மூலம் 7.66 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று 7.17 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். 2019 -20 ஆண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

பால் கொள்முதலில் சாதனை

2010- 11ல் நாள் ஒன்றிற்கு 20.26 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் கொள்முதல், தற்போது 37.46 லட்சம் லிட்டராக உயர்ந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பெய்த மிக கன மழையின் காரணமாக, அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில், பாதிக்கப்பட்ட வயல்களின் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், 2021 ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பெய்த கன மழையின் காரணமாக, 6,62,689 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 18,645 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *