செய்திகள்

57 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 20–

தமிழ்நாட்டில் 57 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் பாரதி நகர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் 68 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர்.

இரண்டாவது டோஸ் 25 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். முதல் டோஸ்க்கும் இரண்டாவது டோஸ்க்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. 57 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை. இது கவலையளிக்கிறது.

50 ஆயிரம் முகாம்கள்

வரும் சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் ஆறாவது மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி மக்கள் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரும் இதனை வலியுறுத்தியுள்ளார். மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால், மக்கள் கூட்டத்தில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது. 340 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *