செய்திகள்

சென்னையில் 16 தொகுதிகளில் 565 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

சென்னை, மார்ச் 12–

சென்னையின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 565 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்து தேர்தல் அலுவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டம், மாவட்டத் தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் மாநகராட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து, பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை சுமார் 45 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. சுவர் விளம்பரங்கள், சுவரொட்டி மற்றும் பதாகைகள் வைத்தால் அவை உடனடியாக அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவு கணக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

சென்னையில் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 17 புகார்கள் பெறப்பட்டு 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மாதவரம், புழல் பகுதிகளில் உள்ள மாநகராட்சி கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 15-ம் தேதி அவை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 565 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 1.20 லட்சம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 ஆயிரம் பேருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில், கழிவறை, சாய்வுதளம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர் முகக்கவசம் அணிந்து வரவில்லையென்றால் திருப்பி அனுப்பப்படுவர் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலா்கள், காவல் இணை ஆணையர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *