சென்னை, டிச. 22–
சென்னை மாநகராட்சி (ஜிசிசி) சார்பில், 5,500க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், 5,500 க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள் சாலைகள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளும் அடங்கும். பொதுவாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் டெண்டர்கள் விடப்படுவது வழக்கமாக உள்ள நடைமுறை. ஆனால் சாலைப் பணிகளை விரைவுபடுத்த, டெண்டர் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மழைக் காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நவம்பர் மாதம் சாலைகள் தோண்டப்படுவதை மாநகராட்சி தடை செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் 250 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட டெண்டர்கள் 50 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துள்ளன. அதாவது, 1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் இதுவரை மீண்டும் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும்.
அடையாறு மண்டலம்
பல்வேறு மண்டலங்களில் சாலை தோண்டப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அடையாறு மண்டலம் (XIII) பகுதியில் மழை இருந்த போதிலும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தன. எல்.டி.ஜி சாலையில் குழாய் கசிவு சரி செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பாக மீட்டமைக்கப்பட்டது” என்று பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சோழிங்கநல்லூர் மண்டலம் 15 இல் மழை குறைந்ததையடுத்து டிசம்பர் 19 ந்தேதி முதல் சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கின.
சோழிங்கநல்லூர் மண்டலம் (XV)ல் 237 சாலைகளுக்கு அனுமதி சான்றுகள் (NOCs) பெறப்பட்ட நிலையில், அவற்றில் 4 பணிகள் முடிவடைந்த நிலையில், 5 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 161 சாலைப் பணிகள் தொடங்க உள்ளன. 26 பணிகள் நிர்வாக ஒப்புதல் பெறவில்லை; 41 சாலைகளுக்கு டெண்டர் விடப்படவில்லை.
சென்னை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலான திட்டங்களுக்காக செய்யப்பட்ட சாலை தோண்டும் பணிகளை மீட்டமைக்கவும் டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. டிசம்பர் 21 நிலவரப்படி 18 சாலைகளுக்கு அனுமதி சான்றுகள் பெறப்பட்டுள்ளன என்று சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.