சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
சென்னை, ஏப்.8-
வீடுகளுக்கு வழங்குவதுபோல, இனி சுயசான்றிதழ் முறையில் 5,382 சதுரஅடி தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் உடனடி அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, துறை யின் அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* தமிழகத்தில் 2,500 சதுர அடி மனையிடத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது. வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் 2 தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின் அனுமதி வழங்கப்படும்.
* குடியிருப்பு கட்டிடங்களுக்கான நிலையான மனை அளவுகள் கொண்ட மாதிரி கட்டிட வரைபடங்கள், முகப்பு தோற்றம் மற்றும் குறுக்கு வெட்டு தோற்ற விவரங்களுடன் பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் உருவாக்கப்படும்.
* குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை களுக்கான கட்டிட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, சிறிய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் இணையதளம் வாயிலாக பதிவு செய்து சுயசான்றிதழ் மூலம் 500 சதுர மீட்டருக்குள் (5,382 சதுரஅடி) கட்டப்படும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடியாக அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும். மேலும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் அமையும் இந்த வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச அணுகுபாதை அகலம் 7 மீட்டரில் இருந்து 6 மீட்டராக குறைக்கப்படும்.
* வரிசை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு பக்கத்திறவிடம் தளர்வு போன்ற சிறப்பு விதிகள் சேர்க்கப்படும்.
* கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதி யற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்.
* நீர்நிலைக்கு அடுத்துள்ள பள்ளி கட்டிங்களுக்கு நீர்நிலைப் பக்கத்தில் எந்த திறப்புகளும் இல்லாத வகையில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால் நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்படும். அதேபோல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு, பள்ளி நிர்வாகமே சேவை சாலை உருவாக்கினால் அந்த பள்ளி கட்டிங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்படும்.
* உள்கட்டமைப்பு மற்றும் வசதி கட்டணங்கள், வளர்ச்சி கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்படும்.
* ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டிற்கு வாகன நிறுத்துமிடத்திற்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவிபுரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றைசாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
* நகர் ஊரமைப்புத்துறை, மாநக ராட்சி, நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் பதிவு பெற்ற வல்லுனர்கள் நகர் ஊரமைப்பு துறையில் செயல்பட அனுமதிக்கப்படுவர். நகர் ஊரமைப்பு துறையில் முழுமைத்திட்ட அலகு (தனிபிரிவு) உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முழுமைத்திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.