செய்திகள் போஸ்டர் செய்தி

51ம் ஆண்டில் அடிஎடுக்கும் ‘தேவி’ குரூப் திரையரங்குகள்

Spread the love

ஓகோ என்றிருந்த தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகமாக மாறிவரும் சூழ்நிலையில்

51ம் ஆண்டில் அடிஎடுக்கும் ‘தேவி’ குரூப் திரையரங்குகள்

இயக்குனர் கே.என்.வரதராஜன் தலைமையில் வெற்றி நடை

* தமிழ் – தெலுங்கு– இந்தி– ஆங்கிலப் படங்கள் திரையீடு

* ஸ்டீரியோ சிஸ்டத்தை ரசிக்கவே திரண்ட ரசிகர் கூட்டம்

மாடி தியேட்டர்களுக்குச் செல்ல சுழலும் சாய்தள பாதை ஸ்பெஷல்

 

நாளை 50வது ஆண்டு –அதாவது பொன் விழாவை வெற்றிகரமாகக் கடந்து, 51–ம் அண்டில் அடி எடுத்து வைக்கிறது, இயக்குனர் கே.என்.வரதராஜன் தலைமையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தேவி சினிப்ளெக்ஸ் அதாவது அதாவது தேவி திரையரங்கம்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் நுங்கம்பாக்கம் ஜெமினி ஸ்டூடியோவில் ஆரம்பித்து அண்ணாசாலையில் அண்ணா சிலை வரை இதே தேவி குரூப் தியேட்டர்களோடு இருந்த திரையரங்குகள் சபையர்– வீகம்சி புளு டயமண்ட், எமரால்ட், ஆனந்த்– மினி ஆனந்த், வெலிங்டன்– ஓடியன்–சித்ரா– கெயிட்டி, காசினோ, நியூஎல்பின்ஸ்டன், சாந்தி தியேட்டர்கள். காலப் போக்கில் ஒன்றன் பின் ஒன்றாக இடிக்கப்பட்டு– அங்கே வெவ்வேறு வணிக வளாகக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட பின் இன்னும் திரையரங்கு என்ற அந்தஸ்தில் நின்று கொண்டு எதிர்ப்பட்ட சோதனைகளைக் கடந்து திரையரங்காக இருந்து கொண்டிருப்பது அண்ணா தியேட்டர், மிட்லண்ட், (ஜெயப்பிரதா பெயரில்) காசினோ, தேவி குரூப்திரையரங்குகள். தேவி குரூப்பை போல தனித்துவம் பெற்றது ராயப்பேட்டை பகுதியில் உள்ள சத்யம் காம்ப்ளக்ஸ் (சத்யம்– சிவம்– சுந்தரம்– சுபம்: 4 அரங்குகள்).

அண்ணா சாலையில் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி செல்வாக்கை, வரவேற்பைப் பெற்ற திரையரங்குகளில் தேவி– தேவி பாரடைஸ்– தேவி கலா– தேவி பாலா திரையரங்குகளுக்கு ஓர் தனி மவுசு உண்டு. தேவி காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும், அதுவும் டிஜிட்டல் ஸ்டீரியோ போனிக் சவுண்ட் சிஸ்டத்தில் ரசிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டிய திரையரங்குகளில் அந்நாளில் முன் வரிசையில் நின்ற திரையரங்கம்.

எழில்மிகு தோற்றம். அகண்ட திரை. சாய் தளத்தில் ஏறி உள்ளே போனால் மாடியில் உள்ள திரையரங்குக்குச் செல்லும் சுழலும் பாதை. படம் முடிந்து வருகிற போது, ஒரே நேரத்தில் பல நூறு பேர் இந்தப் பாதை வழியாக ஒருவர் பின் ஒருவராக இறங்கி வரும் அழகே தனி. அந்த நாட்களில் விசேஷ பாராட்டுக்குரியவர் நிர்மாணித்த கட்டிடக் கலை நிபுணர் கே.என்.சீனிவாசன். பெரியவர்களை விட சிறுவர்– சிறுமிகள் குஷியாய் ஓட்டமும் நடையுமாக இந்த சுழல் பாதையில் வரும்போது… அவர்களுக்குள் எழும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இது இன்றளவும் தொடர் கதை. அண்ணா சாலையில் எந்த ஒரு திரையரங்குகளிலும் இல்லாத ஒன்று இந்தச் சுழல் பாதை.

தமிழ்–ஆங்கிலம்– இந்தி– தெலுங்கு என்று பன்மொழி படங்களைத் திரையிட்டு அந்த நாட்களில் ஒவ்வொன்றையும் வெற்றி விழா காண வைத்த திரையரங்குகள் இவை.

சினிமா அழிந்து கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் ஆதங்கக் குரல் எழுப்பி வரும் நிலையிலும்…

டிவி, யூடியூப், இணைய தளம் வெப் சீரிஸ், ஓடிடி (ஆன் தி டாப்– பிளாட்பாரம்– நேரடியாக படங்கள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு) என்று அறிவியல் வளர்ச்சி கண்டு வரும் சூழ்நிலையிலும்…

கடந்த கால பாரம்பரிய பெருமையுடன், தேவி குரூப் திரையரங்குககள் பொன் விழாவைக் கண்டு இருப்பது, இயக்குனர் கே.என். வரதராஜனின் தொலை நோக்குப் பார்வை, செயல் வேகம் என்றால் அது மிகையல்ல.

என்னோடு துணை நிற்கும் நிர்வாக ஊழியர்கள் படவுலகத்தினர் எங்கள் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் என்று நன்றியோடு சொல்லும் கே.என். வரதராஜன், திரையரங்குகள் பற்றி ‘மக்கள் குரல்’ பத்திரிகைக்கு பலரும் நினைவுகளாக் பகிர்ந்த தகவல்கள் வருமாறு:–

தேவி பொன்விழா 6 மாடி கட்டிடம்

‘சென்னையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் டி.என்.கே.குரூப் நிறுவனங்கள் என்றாலே நன்கறிவார்கள். பிரபலமான நிறுவனம். சினிமாத் தொழிலோடு எங்களுக்கு தொடர்பு 1936–ம் ஆண்டில் துவங்கியது. அப்போது தேவி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்., என்னும் பெயரில் சினிமா நிறுவனத்தை துவக்கினோம். அது இப்போது டி.என்.கே.கோவிந்தராஜூ செட்டி அண்ட் கோ (பி) லிமிடெட் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு சொந்தமானது தான் ‘டி.என்.கே.ஹவுஸ்’ நிறுவனம். இது சென்னை அண்ணாசாலையில் 6 மாடி வர்த்தக வணிக வளாகத்தை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரபலமான கட்டிடக் கலை நிறுவனம்– லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனம். இதன் கட்டிட நிர்மாணப் பிரிவு – என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம். இந்நிறுவனம், 1970–ம் ஆண்டு கட்டிய தியேட்டர் தான் தேவி சினிப்ளக்ஸ்.

 

கட்டிடக் கலையில் அழகு

கட்டிடக்கலையின் அழகுக்கும், எழில்மிகு தோற்றத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்வது தேவி சினி பிளெக்ஸ். பிரபல கட்டிடக்கலை நிபுணர் கே.என்.ஸ்ரீனிவாசனின் கை வண்ணத்தில் உருவான கட்டிடம் இது. பார்த்தவர்களை வைத்த கண் வாங்காமல் பிரமிப்போடு பார்க்க வைக்கும் இந்தக் கட்டிடம் உருவான பிறகு இதே வளாகத்திலேயே அடுத்தடுத்து உருவானவை தேவி, தேவி பாரடைஸ், தேவி பாலா, தேவி கலா திரை அரங்குகள். இதே கட்டிட வளாகத்தில் வெவ்வேறு மாடிகளில் இந்தத் திரையரங்குகள் கட்டப்பட்டன.

 

தேவி உதயம்

1970–ம் ஆண்டு மே 23–ந் தேதியன்று தேவி தியேட்டர் உதயமானது. ஒரு திரையரங்கில் டோல்பி டிஜிட்டல், சர்ரவுண்ட்– எக்ஸ் சவுண்ட் சிஷ்டம் என்னும் அதிநவீன ஒலிப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றால்… அதில் முதல் தியேட்டர் தேவி தியேட்டர் தான்.

அந்நாளில் இங்கிலாந்தில் பிரபலமான டோல்பி லேபரட்டரீஸ் இன்கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் சினிமா அப்ளிகேஷன் என்ஜினீயர் பொறுப்பிலிருந்த பிரபல என்ஜினீயர் மைக்கேல் டோல்பி டென்னரும், சென்னையில் நிறுவனத்தின் ஒலிப்பதிவு ஆலோசகராக இருந்த வி.கிஷோரும் இணைந்து டோல்பி டிஜிட்டல் முறையை நிர்மாணித்தார்கள். DTS டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் ஜேபிஎஸ் – தொழில் முறை ஆம்ப்ளிப்ளையர் மற்றும் ஸ்பீக்கர் (அமெரிக்கா), அல்ட்ரா 80 ஜெனான் லேம்ப் 7000 வாட்ஸ் ப்ரொஜக்ஷன் சிஸ்டம், ஜெர்மன் தயாரிப்பு– எர்னிமான் 7000 வாட்ஸ் ப்ரொஜக்ஷன் சிஸ்டம்– ஸ்ட்ராங் என்ட்லஸ் லூப் பிளாட்டர் சிஸ்டம் சென்னையில் முதன் முதலில் அறிமுகம் ஆகிய அதிநவீன ஒலிப்பதிவு, படத் திரையீட்டு சாதனங்கள் திரையரங்கில் பொருத்தப்பட்டதும், படம் பார்க்க வந்த ரசிகர்கள் துல்லியமான ஒலிப்பதிவு கேட்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பிரமித்தார்கள. (இது ரசிகர்களுக்கு அதுவரை இல்லாத ஒரு புது அனுபவமாக இருந்தது).

தேவி திரையரங்கில் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை–838.

2வது மைல்கல்

அடுத்து 1970–ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வளாகத்தில் 3வது மாடியில் தேவி பாரடைஸ் அதிநவீன திரையரங்கம் திறக்கப்பட்டது. பார்க்கோ சீரிஸ் 2– ப்ரொஜெக்டர்கள், டிசிஐ காம்ளியண்ட் DP 2K–32 B– ஈடிணையில்லாத சாதனங்கள் பெதருத்தப்பட்டுள்ளன. வெள்ளித் திரையில் படங்கள் தெளிவாக விழும். மிகவும் பிரகாசமாகத் தெரியும். இங்கும் டோல்பி டிஜிட்டல் DTS டிஜிட்டல் சிஸ்டம் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தேவி பாரடைஸ் அரங்கில் மொத்த இருக்கைகள் எண்ணிக்கை 1047.

3வது மைல்கல்

3வது மைல்கல்லாக 1971–ம் ஆண்டு ஆகஸ்ட் 12–ந் தேதியன்று தேவி பாலா திரையரங்கு உதயமானது. இங்கும் மிகவும் மேம்பட்ட அதிநவீன டோல்பி டிஜிட்டல் 3டி ப்ரொஜக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரங்கில் எந்த ஒரு மூலையிலிருந்தும் எந்த ஒரு இருக்கையில் இருந்தும் பார்த்தாலும் திரையில் விழும் பிம்பத்தை தெளிவாக துல்லியமாகத் கண்டு ரசிக்கலாம். 3டி கண்ணாடி அணிந்து கொண்டு படத்தைப் பார்க்கும் போது பிரமிக்க வைக்கும். புதியதோர் அனுபவம் ஏற்படும். 3டி அனுபவத்தை உணர வேண்டுமானால் படத்தை தேவி பாலா அரங்கில் டோல்பி

3டி –யில் பார்த்து ரசிக்க வேண்டும். அது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

சவாலாக அமைந்த 4வது மைல்கல்

1974–ம் ஆண்டு தேவி கலா திரையரங்கம் திறக்கப்பட்டது. இது எங்களுக்கு மிகவும் சவாலுக்குரியவிதத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

2வது மாடியில் இந்தத் திரையரங்கம் உள்ளது. ஸ்மார்ட் ஸ்டீரியோ– DTS டிஜிட்டல் சவுண்ட்டு சிஸ்டம், ஜேபிஎல் ஸ்பீக்கர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. தேவி கலா அரங்கில் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 269.

‘லாக் டவுன்’ காலம்

‘உயிர்க்கொல்லி’ கொரோனா இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இது எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னொரு மிகப் பெரிய சவால்.

திரையரங்குகள், இருக்கைகள், மாடிகள், தியேட்டர் வளாகம், நவீன கைப்பிடிகள் ஆகியவற்றில் அரசு சொல்லி இருக்கும் வழகாட்டி விதி முறைகளின்படி அடிக்கடி சானிட்டைசர் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக பாதுகாப்போடு பராமரித்து வருகிறோம். திரையரங்குளில் பணி புரியும் ஊழியர்களின் உடல் வெப்ப நிலையை அவ்வப்போது ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் கண்காணித்து வருகிறோம். ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். வேலை பார்க்கும் நேரத்தில் சானிட்டைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம்.

கழிவறைகள் அடிக்கடி சுத்தம்

அடிக்கடி கழிவறைகளையும் சுத்தமாகத் துடைத்து, சானிட்டைசர் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக பராமரிக்கிறோம்.

கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதியையும், தினசரி சானிட்டைசர் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக பராமரித்து வருகிறோம்.

வெற்றிக்கு இன்னொரு அருமையான வார்த்தை – நீடித்து நிலைப் பெற்றிருப்பது: அது தான் தேவி சினி பிளெக்ஸ்.

இவ்வாறு கே.என்.வரதராஜன் பெருமிதத்தோடு கூறினார்.

* * *

ஸ்வீட் சாரிட்டி முதல் படம் ரிலீஸ்

* * *

1970, மே 23–ந் தேதி சனிக்கிழமையன்று தேவியில் திரையிடப்பட்ட முதல் படம்: ‘ஸ்வீட் சாரிட்டி’ (ஆங்கிலம்) 70 எம்.எம்.படம்.

* * *

கார் பார்க்கிங்கிற்கும் வேலட் பார்க்கிங் வசதிக்கும் முதன் முதலில் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியதும் தேவி சினிப்ளெக்ஸ் தான்.

* * *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *