வாழ்வியல்

5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதிய கற்காலப் பாறை ஓவியங்கள்

விழுப்புரம் மாவட்டம் செத்தவரை மலையில் புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம், பாரதி ராஜா, சரவணன், சீனுவாசன், வினோத் மற்றும் உதயராஜா இணைந்து விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்களும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த பாறையின் ஒரு முனையில் உள்ள ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவமும் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் இதே பாறையில் இரண்டு இடங்களில் வெண்சாந்தில் மனிதர்கள் இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது.

செத்தவரையில் ஊரின் மேற்கே உள்ள ஐயனார் மலையில் தமிழக தொல்லியல் துறையால் ஏற்கனவே 30 வருடங்கள் முன்னர் பாறை ஓவியங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த ஓவியங்கள் யாவும் வேட்டை காட்சிகளைக் குறிப்பது போலவே உள்ளது. இவ்விடத்தில் காணும் ஓவியங்களும் இங்கு வாழ்ந்த மனிதர்களும் விலங்குகளின் வேட்டை காட்சிகளைச் சித்தரிப்பவை ஆக இருக்கிறது.

மேலும் இம்மலையை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்தை ஒட்டிய சிறு குன்று போன்ற பாறையில் மேலும் சில செஞ்சாந்து மற்றும் வெண்சாந்து ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயற்கையான சுனை ஒன்று அமைந்திருக்க அதன் அருகே கற்கள் இயற்கையாகக் கல்திட்டை போன்ற அமைப்பில் அடுக்கப்பட்டு மனிதர்கள் வசிப்பதற்கு ஏதுவாக இவ்விடம் உள்ளது. இவ்விடத்தில் இரண்டு செஞ்சாந்து ஓவியங்களும் வெண்சாந்து குறியீடும் காணப்படுகிறது.விலங்கின் மீது மனிதர்கள் பயணிப்பது போல ஒரு ஓவியமும் ஒரு விலங்கின் வால் பகுதியை மிகுதி படுத்தியது போன்று மற்றொரு ஓவியமும் வரையப்பட்டுள்ளது. இதன் அருகே வெண்சாந்தில் கட்டங்களாக சில குறியீடுகளும் காணப்படுகிறது. இவ்விடத்தின் அருகே உள்ள மற்றுமொரு பாறையில் வெண்சாந்தில் சில மனிதர்கள் வரையப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் செஞ்சாந்து ஓவியங்கள் யாவும் காலத்தால் முற்பட்டவை.

இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகும் என்று கார்பன் – 14 சோதனை மூலம் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *