செய்திகள்

500 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை

நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள் மகிழ்ச்சி

சென்னை, ஆக.1–

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதன் எதிரொலியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60 என்ற விலையில் தக்காளியை விற்பனை செய்யப்பட்டது. மக்கள் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாங்கி சென்றனர்.

இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள், வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் கடந்த மாதம் 4–ந்தேதி முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் வெளிச்சந்தையில் தக்காளின் விலை ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விற்பனையை 67 பண்ணை பசுமைக்கடைகள், 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் 100 ரேஷன் கடைகளிலும், கோவை, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20 கடைகளிலும்; செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 15 கடைகளிலும்; கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 10 கடைகளிலும்; அரியலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் 5 கடைகளிலும் என தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிசந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்கப்படும்போது, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *