செய்திகள்

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

சென்னை, பிப். 3–

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி வரும் 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13-ம் தேதியும் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மைதானங்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *