செய்திகள்

50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கின

சிறப்பு பேருந்துகளில் வந்தனர்

50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கின

முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்

 

சென்னை, மே. 18–

தமிழக அரசு அலுவலகங்கள் இன்று முதல் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட துவங்கின. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பணிகளை மேற்கொண்டனர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25–ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட காவல், சுகாதாரம், கருவூலம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறைகளை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் அனைத்தும் முழுப் பணியாளர்களுடன் செயல்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று 18–ந் தேதியிலிருந்து தொகுதி — ‘அ’ (குரூப் ஏ) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் பெறும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் மற்றும் அனைத்து அலுவலகத் தலைவர்களும் பணி நாட்களான 6 நாட்களிலும் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும். மற்ற அலுவலர்களை பொறுத்த வரை 50% பணியாளர்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசுப் பணிகளை செயல்படுத்த வேண்டும் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

50 சதவிகித ஊழியர்கள் வந்தனர்

நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. சுழற்சி முறையில் அலுவலக பணியில் இல்லாத நாட்களில், அலுவலகப் பணித்தொடர்பாக, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் எந்தவொரு மின்னணு முறையிலும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையினை தலைமை செயலகம் முதல் அரசின் வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டம், கள அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு துறைகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்றும், பணிக்கு வருபவர்களுக்கு உரிய பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கின.

 

முக கவசம்

4–ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்தபடி பணிகளை துவங்கினார்கள்.

அலுவலகங்களில் ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அதாவது முதல் பிரிவு ஊழியர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளிலும், 2ம் பிரிவு ஊழியர்கள் புதன், வியாழன் கிழமைகளிலும், மீண்டும் முதல் பிரிவு ஊழியர்கள் வெள்ளி, சனிக்கிழமைகளிலும் பணியாற்ற வேண்டும். அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் 2ம் பிரிவு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். ஆனால் ‘குரூப் – ஏ’ பிரிவு அலுவலர்கள், வாரத்தின் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

 

தலைமைச் செயலகத்துக்கு அரசு ஊழியர்கள் வருவதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்தில் ஏறியவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர்ந்திருந்தனர்.

சென்னை தலைமை செயலகத்துக்கு வந்த அரசு ஊழியர்கள் நுழைவு வாயிலில் இருக்கும் நாக தேவதை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பணிகளை துவங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *