செய்திகள்

தொழிலதிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண் கைது

திருப்பூர், அக். 16-

படுக்கை விரிப்புகள் ஆர்டர் கொடுக்க வேண்டும் என கூறி ஆபாச படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டும் பெண் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் நாட்ராயன் (வயது 56). இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது அலைபேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், தனது பெயர் வெண்ணிலா என்றும், தங்களுக்கு படுக்கை விரிப்பு அதிகளவில் தேவைப்படுவதால் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆர்டரை எடுத்துக் கொள்ள நாட்ராயன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால், திருப்பூர் கணக்கம்பாளையம் அருகேயுள்ள ஆண்டிபாளையம் பகுதிக்கு வர கேட்டுக்கொண்டுள்ளார் அந்த பெண். இதையடுத்து தனது காரில் நாட்ராயன், உறவினர் குமார் என்பவரை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.

அவர்கள் தெரிவித்த முகவரிக்கு சென்று பார்த்த போது, அங்கு ஏற்கெனவே காத்திருந்த கும்பல் ஒன்று, அவர்களை மடக்கி பிடித்து ஆடைகளை களைந்து படம் பிடித்துள்ளனர். பிறகு பெண் ஒருவரை அருகே நிற்க வைத்து படம் எடுத்துள்ளனர். பின்னர் நாட்ராயனின் ஒன்றரை சவரன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டதுடன், தங்களுக்கு ரூ.3 லட்சம் பணம் வேண்டும் என்றும், இல்லையெனில் படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

பிறகு நேற்று காலை அலைபேசியில் அழைத்து பணம் கேட்டுள்ளனர் வெண்ணிலா. பயந்து போன நாட்ராயன், குமார் இருவரும் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தி, அவரிகளிடம் அலைபேசியில் பேசிய பெண்ணை முதலில் கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் வெண்ணிலா (வயது 27) என்பதும் அவிநாசியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் தனது நண்பர்களான தூத்துக்குடியை சேர்ந்தவரும் இசக்கிபாண்டி (வயது 30), திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 27), ஜெபராஜ் (வயது 24), சின்னதுரை (வயது 29) ஆகியோருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

தொடர்ந்து வெண்ணிலா அளித்த தகவலின் அடிப்படையில் சூலூரில் விடுதியில் தங்கியிருந்த இசக்கிபாண்டி உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *