அடுத்த மாதம் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
சென்னை, மே 22–
ஏழ்மையில் வாடிய நிலையில் வாழும் 5 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் துவக்கி வைக்கிறார்.
கடந்த பட்ஜெட் தொடரின் போது தமிழகத்தில் வறுமையை குறைக்கும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
2024–25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அப்போது தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்துக்காக ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் இது ஏறக்குறைய 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து உயர்த்த இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூக நல திட்டங்களால் வறுமையை குறைப்பதில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும் தாயுமானவர் திட்டம் மூலம் மிகவும் வாடிய நிலையில் வசிக்கும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் அடைய செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாழ்க்கை தரத்தை உயர்த்த…
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் வறுமையை குறைப்பதில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் தமிழகத்தில் 2.2 சதவீதம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் வாடிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படுவார்கள்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக மாநிலம் முழுவதும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்பட உள்ளது.
இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படும். அது மட்டுமின்றி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.
அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அதன் பிறகு இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.