சிறுகதை

5 ரூபாய் குறையுது … ராஜா செல்லமுத்து

சர் சர்ரென விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள். பிரதான சாலை என்பதால் போக்குவரத்து கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
‘ என்ன இவனை இன்னும் காணோம்? அடுத்தவனை இதுக்கு தான் நம்ப கூடாதுங்கிறது. இப்ப வாரேன்னு சொன்னானே ‘ம்ம்’ பெருமூச்சு விட்டபடியே இருந்தான், செல்வகுமார்.
வரும் வாகனங்களின் திசை பார்த்தே ஓய்ந்து போயின, அவன் விழிகள். எரிச்சலின் எல்லை கரை கடந்தது. வரும் வாகனங்களில் ஒன்றில் கூட அவன் இல்லை.
‘நாகு’ ‘நாகு’ டேய் என்னைய மட்டும் இப்படி தனியா நிக்க வச்சுட்டு எங்கடா போன ‘ கோபம் கொழுந்து விட்டு எரிய, செல்போனை எடுத்து நாகுவின் நம்பரை அழுத்தினான் செல்வகுமார்.
‘ டக் டக் ‘ என அவனின் நம்பரை போட, சிரிது நேரத்தில் அவனின் தொடர்புக்கு கனெக்ட் ஆனது.
‘ ட்ரிங்… ட்ரிங்… ..’ அவசர கதியில் போன, அவன் செல்போன் இணைப்பை அலட்சியமாக எடுத்த ‘நாகு’
ஹலோ இப்ப வந்துருவேன் என்றான் நாகு.
‘டேய் எப்ப தான் வருவே, இப்ப வருவேன்னு. இப்ப வருவேன்னு சொல்லியே ரொம்ப நேரம் ஆயிருச்சுடா. உண்மைய சொல்லு இப்ப எங்க இருக்க’ செல்வகுமார் கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.
‘ இல்ல இப்ப வந்திருவேன்’
‘டேய் ஒன்னைய கொல்லப் போறேன் பாரு’ இப்ப இப்பன்னு தான் சொல்றியே ஒழிய வந்தபாடில்லையே. நான் இங்க வந்து 1 ஒரு மணி நேரம் ஆகப்போகுது. இப்ப வாரேன் இப்ப வாரேன் தான் சொல்றியே தவிர, இப்ப வாரேன்னு சொல்லலையே’ என்ற செல்வகுமாரின் பேச்சுக்கு உடனே பதில் சொன்னான் நாகு.
செல்வகுமார், எங்க இருக்க, தி.நகர்ல இருக்குற போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல,
‘ ஓம் அங்க தான் இருக்கியா?
‘ஆமா அதைத்தானே அப்ப இருந்து சொல்றேன்’
‘அப்படியே அங்கேயே இரு, இப்ப வந்திருவேன் ‘ நாகுவை,
‘ டேய், இதையே தான அப்ப இருந்து சொல்ற? சீக்கிரம் வா’ கடுப்பானவனை,
‘ இல்ல இப்ப வந்துருவேன்’ என்ற நாகுவின் போனை கட் செய்தான் செல்வகுமார்.
இவன் நம்மள கேனப்பயன்னு நினைச்சுட்டான் போல’ என்றவன் வரும் வாகனங்களின் திசை பார்த்து நின்று இருந்தான்.
அப்போது, ‘சார், சார்’ என்ற குரல் கேட்டு திரும்பியவனிடம்
‘ சார் ஒரு 5 ரூபா குறையுது, கொடுத்தீங்கன்னா நான் கோயம்பேடு போயிருவேன். ஒரு 5 ரூபா என்று ஒருவன் இருக்க,
‘ம்ம்’ நானே கடுப்பில இருக்கேன். இதுல இவன் வேற’ என்று அவன் முகத்தைப் பார்த்தபோது’ ‘கும்மென்று’ வீங்கி இருந்தது.
‘ஆஹா, இவன் பயங்கரமான ஆளா இருப்பான் போல’ நைட்டு போட்ட மப்பே இன்னும் தெரியாமல் இருக்கு, இதுல வேற கோயம்பேட்டுக்கு காசு பத்தலைன்னு சொல்லிட்டு நிற்கிறானே ‘ என்ற வார்த்தைகள் அவன் நெஞ்சில் படபடவென ஓடியது. மறுபடியும் அவன் ‘ ஒரு 5 ரூவா குடுங்க ‘ என்றவனிடம் வாய் வார்த்தை பேசாமலே ‘இல்லை’ என்று உதடு பிடிக்கிறான் செல்வகுமார்.
‘இவன் தர மாட்டான் போல ‘ என்றவன் கொஞ்சம் ஒதுங்கி
சார் 5 ரூபாய் குறையுது, கோயம்பேடு போகணும் தாரீங்களா? என்றவனிடம் உடனே அவன் 5 ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
‘ரொம்ப நன்றிங்க’ என்றவன் 5 ரூபாயை வாங்கி பையில் போட்டவனை செல்வகுமார் ஒரு மாதிரியாக பார்த்தான்.
5 ரூபாய் கேட்டவன், செல்வகுமாரை பார்த்துவிட்டு, அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றான்.
‘ ச்சே, டேய் நாகு, எங்கடா இன்னும் காணோம்? எங்கடா இருக்க? என்று யோசித்துக்கொண்டிருந்த போது,
‘சார், ஒரு 5 ரூபா குறையுது, கோயம்பேடு போக வேணாம் ப்ளீஸ் தாரீங்களா? என்று வழியில் போவோர் வருவோர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான். டேய், இப்ப தானே ஒருத்தன்கிட்ட வாங்குன? அப்படின்னா நீ பொய் சொல்றியா? என்ற செல்வகுமார் அவனைப் பார்த்து கொண்டே இருந்தான்.
சார், 5 ரூபா குறையுது, நான் கோயம்பேடு போகணும் தாரீங்களா? என்றவன் வருவோர், போவோரிடம் கேட்டு கேட்டு வாங்கிக் கொண்டே இருந்தான். அவனைப் பார்த்த செல்வகுமாருக்கு கடுமையான கோபம் வந்தது.
‘ மனுசங்கள எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க’ ‘ச்கே… என்று கோபம் தலைக்கேற இவன் வேற எப்ப வாரான்னு தெரியலையே’ என்று நாகுவின் போனுக்கு போன் செய்தான்.
‘ ட்ரிங் ட்ரிங் ‘ உன்னை எடுத்த நாகு, இந்தா இப்ப வந்திருவேன். அங்கேயே இரு ‘ என்று நாகுவை கொல்ல வேண்டும் போல இருந்தது செல்வகுமாருக்கு.
‘ சார், ஒரு 5 ரூபா குறையுது. கோயம்பேடு போகணும். ப்ளீஸ் தாரீங்களா? என்றவனை பார்த்தவன், இங்க எல்லாமே இப்பிடித்தான் இருக்கானுக. நாகுவ விட இவன் பரவாயில்லை போல ‘ என்றவன், அவனை நிராகரித்து விட்டு நடையைக் கட்டினான்.
சார் 5 ரூபாய் குறையுது கோயம்பேடு போகணும் தாரீங்களா? என்ற குரல் செல்வகுமாரின் காதில் பட்டுத் தெறித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *