திருச்சி, மே 2
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:–
தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் உள்ளன. மேலும் அத்தேர்வுகளில் குழந்தைகள் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் எடுக்காவிட்டால் பெயில் ஆக்கவும் வழிமுறை உள்ளது. இது, குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும். சிபிஎஸ்இ பள்ளிகளில் “நோ ஆல் பாஸ்” தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் போட மறுத்து கேள்வி எழுப்ப வேண்டும்.
5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். 5ம் வகுப்பு மாணவர்களை பெயில் (FAIL) ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும். சிபிஎஸ்இ நடவடிக்கையை பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும். சாக்லேட் சாப்பிடுற வயசு பிள்ளைக்கு எப்படி இதை புரிய வைப்பீங்க?.
கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்?. இதன் காரணமாக தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. என்.சி.இ.ஆர்.டி. பாடங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. சிபிஎஸ்இ-யின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தேசிய கல்விக் கொள்ளை உள்ளே நுழைந்தால் மாநில கல்வி அமைப்பே இல்லாமல் போகும் நிலை உருவாகும். தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. அனைவரும் மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.