செய்திகள்

5 புலிகள் மர்ம மரணம்: பழிக்குப்பழியாக பசுவின் உரிமையாளர் விஷம் கொடுத்து கொன்றது உறுதி

Makkal Kural Official

பெங்களூரு, ஜூன் 28–

மாதேஸ்வரன் மலை வன விலங்குகள் சரணாலயத்தில் தாய்ப்புலி மற்றும் 4 குட்டிகளின் மர்ம மரணத்தில், பழிவாங்கும் செயலாக பசுவின் உரிமையாளர் விஷம் கொடுத்து கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் மாதேஸ்வரன் மலையில் மீன்யம் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தாய்ப்புலியும், 4 குட்டிப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தன.

அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களை பார்வையிட்டனர். சுற்றுப்புற கிராமங்களில் யாராவது இறைச்சியில் விஷம் கலந்து, புலிகளை கொன்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புலிகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது தாய்ப்புலி மற்றும் 4 புலி குட்டிகளின் மரணம் பழிவாங்கும் செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்பகத்தில் ஒரு பசுவை புலி கொன்றதால், அதற்கு பழிதீர்ப்பதற்காகவே கொல்லப்பட்ட பசுவின் உடலில் பூச்சிக்கொல்லியை பசுவின் உரிமையாளரின் மகன் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை உட்கொண்ட தாய்ப்புலி மற்றும் 4 புலி குட்டிகள் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.காட்டின் எல்லையோரப் பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்கள், தங்கள் மாடுகளை காட்டு விலங்குகள் கொல்வதால், கொல்லப்படும் கால்நடையின் உடலில் விஷத்தைக் கலந்து விடுவதாக காட்டுயிர் மேம்பாட்டு அமைப்பு கூறுகிறது. அவர்கள் கூறியதுபோலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *