செய்திகள்

5 நாட்களுக்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 26–

30–ந்தேதி வரை 5 நாட்களுக்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தென்மேற்கு பருவக்காற்று மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை முதல் 30–ந்தேதி வரை மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்ச பெய்த மழை அளவு விவரம் வருமாறு:–

பந்தலூர்‌ வட்டாட்‌சியர் அலுவலகம்‌ – 16 செ.மீ. மழை, தேவலா – 10 செ.மீ., ஊத்துக்கோட்டை – 9 செ.மீ., சின்னக்கல்லார்‌, ஹாரிசன்‌ எஸ்டேட்‌ தலா 7 செ.மீ., சோலையார்‌ – 6 செ.மீ., ஏற்காடு, கும்மிடிப்பூண்டி, கூடலூர்‌ பஜார்‌, சோழவரம், வால்பாறை தலா 5 செ.மீ., சின்கோனா – 4 செ.மீ., பொன்னேரி, பள்ளிப்பட்டு, குடவாசல்‌, அவலாஞ்சி, திருத்தணி, மேல்‌ பவானி, தர்மபுரி, ரெட்‌ஹில்ஸ்‌, மயிலம்‌ தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

30–ந்தேதி வரை வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி, வடமேற்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *