செய்திகள்

5 சுங்கச்சாவடிகள் அகற்றிட ஒன்றிய அரசுக்கு அமைச்சர் வேலு கடிதம்

சட்டசபையில் தகவல்

சென்னை, ஆக.27–

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசுகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடி என உள்ளது. அது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர் இருக்கிறாரா என பார்த்து அனுப்புகிறார்கள். இது அசிங்கமாக இருக்கிறது. பெண்களுக்கு பஸ்ஸில் இலவசம் என நீங்கள் கூறியதுபோல் சுங்கச்சாவடிகளில் இலவசம் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

தமிழகத்தில் 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. தமிழக முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன் இது குறித்த பிரச்சினையை என்னிடம் கூறினார். ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். சுங்கச்சாவடிகளில் பல நிமிட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சென்னசமுத்திரம், வானகரம், நெமிலி, பரனுர், சூரப்பட்டு ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இந்த கூட்டத் தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன் என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *