திருப்பதி, செப். 20–
திருப்பதியில் ஏற்கெனவே 5 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், இன்று காலையில் 6 வதாக மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது.
உலகப்பிரசித்தி பெற்ற ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு அலிபிரி பாதையில் நடந்து செல்வது வழக்கம். முழுக்க வனப்பகுதியாக இருப்பதால் இங்கு வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் கவனமாக செல்ல வேண்டியது அவசியம்.
இந்நிலையில் ஜூன் 24 ஆம் தேதி திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று கௌஷிக் என்ற சிறுவனை தாக்கியது. இதனையடுத்து, ஒரு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர். ஜூலை 14 ஆம் தேதி நெல்லுரை சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு 4 சிறுத்தைகள் அடுத்தடுத்து பிடிக்கப்பட்டன. அவற்றில் முதல் இரண்டு சிறுத்தைகள் சிறுமியை தாக்கியவை அல்ல என்று மரபணு சோதனையில் தெரிய வந்தது.
பிடிபட்ட 6 வது சிறுத்தை
இதனையடுத்து, ஒரு சிறுத்தை நாகர்ஜுன சாகர் ஸ்ரீசைலம் புலிகள் வன சரணாலயத்தில் விடப்பட்டது. மற்றொரு சிறுத்தை விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மீதமுள்ள இரண்டு சிறுத்தைகளின் மரபணு சோதனை முடிவுகள் வரும் வரை திருப்பதி உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 5 சிறுத்தைகள் திருப்பதி மலைப் பாதையில் சுற்றி வருவது வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதை தொடர்ந்து, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது. சிறுமி இறந்ததில் இருந்து தற்போது 5வது சிறுத்தை, சிறுவனை தாக்கியதில் இருந்து 6 வது சிறுத்தை தற்போது பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவலால் பக்தர்கள் பெரும் அச்சத்துடன் நடைபாதையில் பாதயாத்திரை செல்கின்றனர்.