கோத்தகிரியில் பண்பாட்டுத்துறை நாட்டியாஞ்சலி
நீலகிரி, டிச.5–
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் பரதநாட்டியாலயா டிரஸ்ட் (லதா ரவி, சுஜாதா ஜெயசீலன்), சங்கரம் (சஸ்மிதா அரோரா) அமைப்புகள் இணைந்து ஓம் காரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தின.

கோத்தகிரி கோட்டா ஹால் சாலையில் உள்ள ஐசிஎஸ் பள்ளி வளாகக் கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டலம் கலை பண்பாட்டுத்துறை (தமிழக அரசு) இயக்குனர் வ.கோபாலகிருஷ்ணன், மக்கள்குரல் வீ. ராம்ஜீ இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று அமைப்பாளர்கள் மூவரையும், பங்கேற்ற நாட்டிய பள்ளிகளின் ஆசிரியர்களையும் (குருமார்கள்), மாணவிகளையும் மனம் திறந்து பாராட்டி வாழ்த்தினார்கள்.
சங்கரம் நாட்டியப் பள்ளிக்கு பக்க பலமாக இருக்கும் பக்க வாத்தியக் கலைஞர்கள் அனிஷ் (வாய்ப்பாட்டு), சிறுமுகை சிவகாமி சதீஷ் (வயலின்), நவீன் (மிருதங்கம்),டாக்டர் வினோத் (புல்லாங்குழல்), ஹரி (சிறப்பு ஒலி) ஆகிய 5 இளம் கலைஞர்களுக்கு “ஓம் காரா கலா ரத்னா” விருதுகளையும், அன்புப் பரிசையும் கோபாலகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
இளம் வயதினராக இருக்க வேண்டும், நேர்த்தியாக வாசிக்க வேண்டும், எதிர்கால தலைமுறையினருக்கு வழி காட்டுபவராக இருக்க வேண்டும், சாதனையாளராக இருக்க வேண்டும், தொழிலில் நேர்மையாய் நடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 5 அம்சங்களைக் கருத்தில் கொண்டு சஸ்மிதா அரோரா, “ஓம்காரா கலா ரத்னா” விருது வழங்குவதை பாராட்டினார் கோபாலகிருஷ்ணன்.
சிறப்பு விருந்தினர்கள், விழா அமைப்பாளர்கள் குத்துவிளக்கேற்றினார்கள். முதலில் மேடை ஏறிய சஸ்மிதா அரோராவின் சங்கரம் பள்ளி மாணவிகளின் தசாவதாரம் ஒட்டு மொத்த நிகழ்ச்சிகளில் சிகரம் தொட்டது. (கருட வாகனம் சிவாலி, கூர்மாவதாரம் ஜோஷிகா, வாமன அவதாரத்தில் திருமால் விஸ்வரூபம் கௌசிகா: வாவ்… சிலிர்க்க வைத்த இளம் கலைஞர்கள். புள்ளிமான்களுக்கு நடுவில் துள்ளிப் பாயும் புலியாக தயானந்த், கிருஷ்ணன் வேடத்தில் நினைவைத் தொட்டான்).
காயத்ரி புண்ணிய மூர்த்தியின் தேவ் நாட்டியாலயா மாணவிகளின் நவரச பாடலுக்கு ஆடல், ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளி கங்கா நாயுடுவின் மாணவிகள் சிம்ம வாகினி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, கங்கா நரேந்திரனின் ஸ்ரீ தியாகராய நித்ய கலா மந்திர் மாணவிகளின் சுயம்வரம் வந்த வேளை, காளிங்க நர்த்தனம், பெங்களூரு நந்தினி வசந்தின் 9வது கவுன்ட் அகாடமி மாணவிகளின் சிவ ஓம் … அர்த்த நாரீஸ்வரர், தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர –- மேளம் இசை, அருணகிரிநாதரின் திருப்புகழ்…, பவானி விஸ்வநாதனின் முத்ரா பள்ளி மாணவிகளின் ஆனந்த தாண்டவமாடும்…, ஆனந்த கூத்தாடினார்,
மஞ்சு சரவணன், பிந்து பத்மநாபனின் விருக்ஷ்ம் நாட்டியப் பள்ளி மாணவிகளின் மல்லாரி நடராஜரின் திருவீதி திரு உலா), மதுரா நகரில் இளம் கோபியர் களிடம் கிருஷ்ணனின் சேட்டைகள், சகியே ஏன் இந்த ஜாலம், வள்ளிக் கணவன் பெயரை… பாடல்களில் பாராட்டை பெற்றார்கள்.
* தசாவதாரம் பின்னணியில் சஸ்மிதா அரோராவின் வர்ணனையும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி ஏற்ற இறக்க குரலில் பேச்சும் நிகழ்ச்சியில் தனிச்சிறப்பு. (ஒளி – ஒலி விருந்து)
* நந்தினி வசந்தின் நிகழ்ச்சியில் வர்ணனை, தமிழில் எஸ்ஏசி வசந்த்- பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தார். கம்பீரம். சிம்மக் குரல், அரங்கில் நிசப்தம் (வசந்த் இளம் மேஜிக் நிபுணர்).
‘‘ஊட்டி நீலகிரி, கோவை ஈரோடு மாவட்டங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இளம் கலைஞர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டவே, அவர்களுக்கு ஊக்கம் தரவே, கலைப் பண்பாட்டுத் துறையின் ஆதரவோடு இந்நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி ஓம் காரா. நீலகிரி வரலாற்றில் முதல் முறை’’ என்று பெருமிதத்தோடு முன்னுரை எழுதினார் சஸ்மிதா அரோரா.
‘‘திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளம் கலைஞர்களுக்கு பரத நாட்டியாலயாவும், சங்கரம் அமைப்பும் தோள் கொடுக்கும் முயற்சியே இது’’ என்று மகிழ்ச்சியுடன் விளக்கினார் லதா ரவி.
நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் சுஜாதா ஜெயசீலன், லதா ரவியின் நிழல்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் புனிதவதனி. தமிழ் ஆசிரியை. நீலகிரி மாவட்டத்தில் பட்டிமன்றப் பேச்சாளர். கதை – கட்டுரை – கவிதைகள் எழுதி வருபவர். சஸ்மிதாவின் மாணவி, நாட்டியக் கலைஞர் என்று பன்முகத்திறமையாளர்.
ஐசிஎஸ் பள்ளியின் காப்பாளர் மகேஸ்வரி செந்தில், நிகழ்ச்சியை நடத்தத் தன் பள்ளியை கொடுத்து உதவினார். ‘‘கல்வியிலும், கலைகளிலும் கனவுகள் கற்பனைகளோடு வரும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அரவணைக்க தாம் எப்போதும் தயார்’’ என்று அவர் உறுதி அளித்தார். (நலிந்த நிலையில் மூடவிருந்த ஐ சி எஸ் பள்ளியை எடுத்து, இப்போது வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்.)
சங்கரம் அமைப்புக்கு வலுவான தூண்களில் ஒன்றாக இருக்கும் கோவை ராமகிருஷ்ணன், மாலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கலை குழுக்களுக்கும், மாணவர்களுக்கும் விருது, சான்றிதழைகளை வழங்கினார்.
– வீ. ராம்ஜீ