சென்னை, டிச.13–
சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை 18 மாதம் காலத்தில் 5,020 அறுவை சிகிச்சைகள் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதலமைச்சரால் 15.6.2023 அன்று சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலங்களில் (18 மாதங்கள்) 5,020 அறுவை சிகிச்சைகளும், 538 நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 பொது அறுவை சிகிச்சைகள், 1000த்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் 137 இருதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 10 மாதத்தில் இருதயவியல் துறையில் 1,683 பேருக்கு ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (12–ந் தேதி) மருத்துவமனைக்கு வருகை புரிந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்படுவதற்கு காரணமாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.