ராகுல் தொகுதியில் 20 இடங்களில் எந்திரங்கள் கோளாறு
டெல்லி, மே 20–
மக்களவை தேர்தலில் 5 ஆம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களுடன் 695 பேர் போட்டியிடும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 5 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. இதில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், பீகார் முன்னாள் முதலமைச்சரின் மகள் ரோகிணி ஆச்சார்யா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் 5 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியைத் தொடர்ந்து, 2 வது தொகுதியாக உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியிலும் இம்முறை போட்டியிடுகிறார்.
ராகுல் தொகுதியில் கோளாறு
இத்தொகுதி காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. இதுவரை சோனியா காந்தி போட்டியிட்டு வந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவர் மாநிலங்களவை எம்பியாகி உள்ளார். இதனால் முதல் முறையாக ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாரதீய ஜனதா சார்பில் உபி அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியின் 20 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. உபியின் அமேதி தொகுதியில் 3வது முறையாக ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான கிஷோரி லால் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் லக்னோவில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சமாஜ்வாடி சார்பில் ரவிதாஸ் மெரோத்ரா களமிறங்கி உள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா முதல் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கி உள்ளார். அவர் சரண் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சந்திரா ராமை எதிர்த்து போட்டியிடுகிறார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் பயாஸ் அகமது மிர்ரையும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் சஜித் கனி லோனையும் எதிர்த்து போட்டியிடுகிறார். இவர்களுடன் மொத்தம் 695 வேட்பாளர்கள் 5ம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹேமந்த் சோரன் மனைவி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 3 மக்களவை தேர்தலுடன், முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் காண்டே சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார். ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 4 கட்டமாக சட்டப்பேரவை தேர்தலும் நடந்து வருகிறது. இதில் 2ம் கட்டமாக இன்று 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் ஹின்ஜிலி, கன்டபன்ஜி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இன்றுடன் 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிகிறது. எஞ்சிய 115 தொகுதிகளுக்கு 6 ஆம் கட்டமாக மே 25ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 7 ஆம் கட்டமாக ஜூன் 1 ந்தேதி 57 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 2 கட்ட தேர்தல் முடிந்ததும் ஜூன் 4 ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளது. 5 ஆம் கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவுடன் மகாராஷ்டிரா மாநிலத்திலும், லடாக்கிலும் தேர்தல் முடிவடைகிறது.