செய்திகள்

5 ஆண்டுகளில் 34 வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

நாடாளுமன்றத்தில் அமைச்சர் அதிர்ச்சி தகவல்

டெல்லி, டிச. 08–

கடந்த 5 ஆண்டுகளில் 34 வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர்.

இதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில், 2018 முதல் தற்போது வரை 403 பேர் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் கூறினார். 5 ஆண்டுகளில் மொத்தம் 34 வெளிநாடுகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

மாணவர்களின் உயிரிழப்புகள்

கனடாவில் 2018 முதல் 91 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததே அதிக எண்ணிக்கை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 48 உயிரிழப்புகளும், ரஷ்யாவில் 40 உயிரிழப்புகளும், அமெரிக்காவில் 36 உயிரிழப்புகளும், ஆஸ்திரேலியாவில் 35 உயிரிழப்புகளும், உக்ரைனில் 21 உயிரிழப்புகளும், ஜெர்மனியில் 20 உயிரிழப்புகளும், சைப்ரஸில் 14 உயிரிழப்புகளும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இது குறித்து மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன் மாநிலங்களவையில் கூறுகையில், வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும். வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அதனை முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதை இந்திய அரசு உறுதி செய்கிறது எனவும் மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *