செய்திகள்

48-வது சென்னை புத்தகக் கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கி வைத்தார்

Makkal Kural Official

சென்னை, டிச.28-

சென்னை புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நடைபெறும். அந்தவகையில் 48-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.

புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மொத்தம் 900 அரங்குகளுடன் இந்த கண்காட்சி நடக்க இருக்கிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வாசகர்கள், மக்கள் பார்வையிட முடியும். புத்தக கண்காட்சியையொட்டி, ஓவியம், பேச்சு போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது.

வழக்கமாக புத்தக கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவைத் தொடர்ந்து அதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாமல், வெறும் கண்காட்சி மட்டும் தொடங்கி வைக்கப்பட்டது.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி அடுத்த மாதம் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அதாவது 17 நாட்கள் நடக்கிறது.

கண்காட்சியின் நிறைவு நாளான அடுத்த மாதம் 12-ந்தேதி மாலை 6 மணிக்கு 25 ஆண்டுகள் பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்கள், பொன்விழா, நூற்றாண்டு கண்ட பதிப்பகங்கள், கொடையாளர்கள், நிறுவனங்களை பாராட்டி சிறப்பு செய்யப்பட இருக்கிறது. அந்த நாளில் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரங்க மகாதேவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *