செய்திகள்

47 ஆண்டுகள் இல்லாத கனமழை சென்னை தப்பியது எப்படி?

ஸ்டாலின் பேட்டி

போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள்

சென்னை, டிச.6-–

வெள்ள நிவாரணப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கினார்.

கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டதோடு, யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து பேசினார். பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

மீனம்பாக்கத்தில் 43 செ.மீ., பெருங்குடியில் 44 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. 2015ம் ஆண்டில் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2021ம் ஆண்டு நவம்பரில் பெருமழை ஏற்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தி, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வெள்ளநீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டோம்.

இந்த பணிகளால்தான், தற்போது ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தபோதும் அதன் தாக்கம், கடந்த காலங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது பெருமளவு குறைந்திருக்கிறது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நுங்கம்பாக்கத்தில் 29.4 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 34.5 சென்டிமீட்டர் மழையும் 24 மணி நேர காலஅளவில் பெய்திருந்தது.

44 செ.மீ. மழை

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மழை, பெருங்குடியில் மட்டும் 44 சென்டிமீட்டரும், மீனம்பாக்கத்தில் 43 சென்டிமீட்டரும் என 36 மணி நேரத்தில் மிகமிக அதிகமாக பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் விரைவாக செல்லாததால் சென்னையில் இரண்டு நாட்கள் பெருமழை பெய்தது. அதனால்தான் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், உடனடி நிவாரணப்பணிகளாலும் உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்தனர். தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தாலும் 7 பேர் மட்டுமே இறந்தனர். அதுவும் ஏற்பட்டிருக்கக்கூடாது. அதற்காக வருத்தப்படுகிறேன்.

தற்போது 9 மாவட்டங்களில் 61 ஆயிரத்து 666 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கியிருக்கிறோம். 1 லட்சம் பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. புயலினால் அலைகளின் அளவு அதிகமாகிவிட்டதால், மழைவெள்ள நீர் கடலில் மிக மெதுவாகவே வடிகிறது.

2015-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1 லட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீர் திடீரென திறந்துவிடப்பட்டது. அப்போது வெள்ளம் ஏற்பட்டதற்கு அது ஒரு முக்கிய காரணம். அது செயற்கை வெள்ளம். ஆனால் தற்போது இது இயற்கையாக ஏற்பட்டுள்ள வெள்ளம். கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்து நீர் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திறந்துவிடப்பட்டதால் இந்த பெருமழையின்போது ஓரளவிற்கு சமாளித்திருக்கிறோம். அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி அளவிற்கு மட்டுமே நீர் திறந்துவிடப்பட்டது.

சென்னை தப்பியது எப்படி?

ஆனால் சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சொல்கிறார். ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் திட்டமிட்டு நடைபெற்ற காரணத்தினால்தான், 47 ஆண்டுகளாக பார்க்காத மழையில் இருந்து சென்னை தப்பி இருக்கிறது.

75 சதவீத இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால், சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் விழுந்துவிட்டன. எனவேதான் மின் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறோம். அதுவும் இரண்டொரு நாளி சரிசெய்யப்பட்டுவிடும்.

2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு, நிவாரணப்பணிகள் 4 நாட்கள் கழித்துதான் நடந்தன. ஆனால் நேற்றே இந்த பணிகள் முழு பலத்துடன் தொடங்கப்பட்டுவிட்டன. அதிகமாக ஒரு வாரத்திற்குள் எல்லாவற்றையும் சரி செய்யவேண்டும். அதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் அமைச்சர்கள், அதிகாரிகளை நியமித்து பணிகளை உடனடியாக செய்யப்போகிறோம். கணக்கெடுப்பு பணிகளை ஓரளவு தொடங்கிவிட்டோம்.

மத்திய அரசிடம் நிதியை கேட்டிருக்கிறோம். என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, நமது நிதி ஆதாரத்தைப் பொறுத்து, என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். இன்னும் நான்கு, ஐந்து நாட்கள் பொறுத்திருந்தால், நிச்சயமாக முழு நிவாரணங்களும் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *