செய்திகள்

45 நாளில் மருத்துவமனை: ஆசியன் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் திமுக அமைச்சர்

சென்னை, ஜூலை 6–

திமுக ஆட்சி அமைந்த பிறகு, 45 நாட்களில் 70 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட மருத்துவமனை ஆசியன் ரெக்கார்ட்ஸ் புத்தககத்தில் இடம்பெற உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதன் முழுமுதல் கவனமும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடக்கைகளிலேயே உள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் பங்குபெற்ற அனைத்து அமைச்சர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து, அதற்கான பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. கொரோனா முதல் அலையின்போது அதிகபட்சம் 500 படுக்கை வசதிகள்தான் இங்கு இருந்தது. தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியது.

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் என பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனர். அப்போது, அமைச்சர் சு. முத்துச்சாமி இடைவிடாத செயல்பாட்டின் மூலம், தற்காலிகமாக 500 படுக்கைகள் அமைத்தார். மேலும், நிரந்தர புதிய மருத்துவமனை வேண்டும் என திட்டமிட்டு, ஈரோடு மாவட்டத்திலுள்ள ரோட்டரி கிளப், பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஒளிரும் ஈரோடு தன்னார்வ அமைப்பினர் ஆகிய அனைவரையும் அழைத்து பேசினார்.

45 நாளில் சாதனை

அனைவரும் உதவ முன்வந்ததைத் தொடர்ந்து, பல நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் ஒரு பிரம்மாண்டமான கொரோனா மருத்துவமனை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது அமைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் 400 படுக்கைகள் கொண்ட நிரந்தர மருத்துவமனை ஒன்று உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பதால், ஆசிய அளவில் ‘ஆசியன் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இவை வெளியாக உள்ளது. அதேபோல் லிம்கா ரெக்கார்டு புத்தகத்தினர் இந்த மருத்துவமனையைப் பார்வையிட்டு சாதனைச் சான்று கொடுக்கவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சீனியர் அமைச்சர் முத்துச்சாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *