செய்திகள்

ஒரே மேடையில் மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்கள் வெளியீட்டு விழா

Spread the love

சென்னை, ஜன. 13–

குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்புத் திறனை அதிகரிக்க வீடுகளில் சிறிய நூலகம் அமைக்க வேண்டும். குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்து செல்வது போல் நூலகத்திற்கும் பெற்றோர்கள் அழைத்து செல்ல வேண்டும் என்று மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்கள் வெளியீட்டு விழாவில் நீதிபதிகள் வைத்தியநாதன், கிருபாகரன் ஆகியோர் அறிவுறுத்தினார்கள்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) நடத்தும் 43 வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் சார்பில் 43 நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன் வரவேற்புரையாற்றினார். நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், கிருபாகரன், குமுதம் குழும அதிபர் ஜவஹர் பழனியப்பன், திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய், கவிஞர் விவேகா, நடிகைகள் சொர்ணமால்யா, வெண்ணிறை ஆடை நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு மணிமேகலை பிரசுரத்தின் நிறுவனர் அமரர் தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் –3), லேனா தமிழ்வாணனின் – 250 ஒரு பக்கக் கட்டுரைகள், மக்கள் குரல் துரை. சக்திவேலின் – ‘ஒளவையின் அறம் கூறும் ஆத்திசூடி கதைகள்’ உள்பட 43 நூல்களை வெளியிட்டனர்.

இலங்கை புத்தகப் புரவலர் ஹாசிம் உமர், கருணாகரன், கலக்கல் கந்தசாமி, சக்தி தாசன் உள்பட பலர் 43 நூல்களின் தொகுப்பை வாங்கினர்.

விழாவில் நீதிபதி வைத்தியநாதன் பேசுகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சினிமாவுக்கும் கோவில்களுக்கும் அழைத்துக் கொண்டு செல்வது போல் நூலகத்திற்கும் புத்தக கண்காட்சிக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கும் படிக்கும் ஆர்வம் ஏற்படும். நமது குழந்தைகள் புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க பழக்கமில்லாதவர்களாக உள்ளனர். எனவே வீடுகளில் சிறிய நூலகத்தை ஏற்படுத்தி குழந்தைகளின் வாசிப்புத் திறனை வளர்க்க வேண்டும் என்றார்.

ஆங்கிலம், தமிழ் இரண்டு கண்கள்

நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:

சில பெற்றோர்கள் என் குழந்தை ஆங்கில வழி கல்வி படிக்கிறது அதனால் என் குழந்தைக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமையாக சொல்கிறார்கள். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். நமது தமிழ் மொழில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான மொழி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகும் மொழி நமது தமிழ் மொழி. ஆங்கிலம் உலகத்தில் நடைமுறையில் இருக்கும் மொழி. அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலமும் தாய் மொழியும் இரண்டு கண்கள் போன்றது. நம் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். இது போன்ற புத்தக கண்காட்சிக்கும், நூலகங்களுக்கும் நமது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் அவர்களுக்க படிக்கும் ஆர்வம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இளம்பாரி க.கருணாகரன், உலகத் தங்கத் தமிழ்த்திலகம் மகேஸ்வரன், சுமதி சீனிவாஸ், கலைஞர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ஆர்.மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *