செய்திகள்

43 பந்துகளில் 193 ரன்களை எடுத்து ‘டி10’ கிரிக்கெட்டில் உலக சாதனை

லண்டன், டிச. 09–

ஐரோப்பியன் ‘டி10’ கிரிக்கெட் தொடரில் ஹம்சா சலீம் தார் என்பவர் வெறும் 43 பந்துகளில் 193 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமாக இருப்பது போல், ஐரோப்பாவில் டி10 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ஸ்பெயின் நாட்டின் தலைநகர் பார்சிலோனாவில் ஐரோப்பியன் கிரிக்கெட் ‘டி10’ தொடர் நடக்கிறது. அதில் 5ம் தேதி கேடலுன்யா ஜாகுவார் (சி.ஜே.ஜி) அணியும், சோஹல் ஹாஸ்பிடல்டெட் (எஸ்.ஓ.எச்) அணியும் மோதின.

10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேடலுன்யா அணிக்கு ஹம்சா சலீம் தார் மற்றும் யாசிர் அலி ஆகியோர் துவக்கம் தந்தனர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டி சிக்சர் மழை பொழிந்தனர். குறிப்பாக ஹம்சா சலீம் ருத்ரதாண்டவம் ஆடினார். 12வது பந்தில் அரைசதம் கடந்த ஹம்சா சலீம், 24வது பந்தில் சதம் விளாசினார்.

43 பந்தில் 193 ரன்கள்

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் வெறும் 43 பந்தில் 193 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்டரி, 22 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ‘டி10’ கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஹம்சா சலீம் படைத்தார். இதற்கு முந்தைய சாதனையாக 163 ரன்கள் என்ற உச்சமே உள்ளது. முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 257 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை விரட்டிய சோஹல் ஹாஸ்பிடல்டெட் அணி 10 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 153 ரன்கள் வித்தியாசத்தில் கேடலுன்யா ஜாகுவார் அணி வெற்றிப்பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *