செய்திகள்

43 டாக்டர்கள் மரணம் என்பதா? உதயநிதி ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் கண்டனம்

தவறான தகவல்களை வெளியிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை

43 டாக்டர்கள் மரணம் என்பதா?

உதயநிதி ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் கண்டனம்

சென்னை, ஆக.5-–

தமிழகத்தில் 43 டாக்டர்கள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் உண்மை இல்லை எனவும், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-–

தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 77.8 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 784 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு மருந்து இல்லாத நிலையிலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை மூலம் பலரை குணப்படுத்தி உள்ளோம்.

உலக நாடுகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லாமல் திணறி வரும் நிலையில் தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கைகள், ஆக்சிஜன் வழங்கும் நிலையில் தயார் நிலையில் உள்ளது.பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அரசு மருத்துவ வசதிகள் செய்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆதாரம் இல்லாத வீண் வதந்திகளை பரப்பக்கூடாது. தற்போது தமிழகத்தில் 43 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவரும் தகவல் உண்மை இல்லை. இதுகுறித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்க செயலாகும். இதுபோன்று எந்த ஒரு தகவலையும் இந்திய மருத்துவ சங்கம் வெளியிடவில்லை என மறுத்துள்ளது. திட்டமிட்டு தவறான தகவலை வெளியிடக்கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *