செய்திகள்

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதிய ஆணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, டிச. 10–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் பத்திரிகையாளர் நலவாரியம் 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டு, உழைக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை, இயற்கை மரணத்திற்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய உதவித் தொகைகள் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர் நலவாரியத்தில் தற்போது வரை 3674 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, 81 பத்திரிகையாளர்களுக்கு ரூ.8,56,500 உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,000 ஆக 14.06.2023 முதல் உயர்த்தப்பட்டு, 356 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.6,000 ஆக ஜுன் 2023 முதல் உயர்த்தப்பட்டு 72 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 125 பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், 27 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்றப்பின்னர் 59 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு 2 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 16 பத்திரிகையாளர்களுக்கு 30 இலட்சத்து 61 ஆயிரத்து 339 ரூபாய் மருத்துவ உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் ச.செல்வராஜ், முனைவர் ஆர். பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *