திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவட்டார், ஜூலை 6–
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 29-ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நேற்று கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணி நடந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன் களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள்ளா நேரத்தில் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6.00 முதல் 6.50 வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, திருக்கோயிலின் உள்பிரகாரத்தில் எல்இடி திரை வைக்கப்பட்டு குடமுழுக்கு காட்சிபடுத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பதவியேற்ற தி.மு.க ஆட்சி, திருக்குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த திருக்கோயிலில்களில் எல்லாம் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 200 மேற்பட்ட திருக்கோயில்களை கள ஆய்வு செய்தபோது அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் போது இத்திருக்கோயிலுக்கு 2007 ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறாத சூழ்நிலை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது அறிவுரையின்படி கடந்த ஆண்டு 2 முறை வருகை தந்து இத்திருக்கோயிலை ஆய்வு செய்தோம். திருப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு தற்போது அனைத்தும் பணிகளும் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. அரசியலுக்கு அப்பாற்பாட்டு அனைத்து பிரிவினை சார்ந்த மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். நடைபெறாமல் உள்ள திருக்கோயிலின் திருப்பணிகளை நடத்தி குடமுழுக்கு நடத்துகின்ற நல்லாட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது.
ஆன்மீகச் சுற்றுலா
அதோடு மட்டுமல்லாமல் கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 490 திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் போது 17 லட்சம் மானியத்துடன் ஒப்படைத்தனர். அது படிப்பபடியாக ரூபாய் 3 கோடி உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு ஆண்டுக்கு ரூ.6 கோடியாக உயர்த்தி முதல்வர் வழங்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றியுள்ள 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் ஒரு திருக்கோயிலுக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 12 சிவாலயங்களில் மகா சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது இந்த 12 சிவாலயங்களிலும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் சிவாலய ஓட்டம் நடைபெறுகின்ற சிவாலயங்களில் முக்கிய விழாக்காலங்களில் ஆன்மீகச் சுற்றுலா நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. அரவிந்த், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவப்பிரியா அவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.