செய்திகள்

41 ஆண்டு காலம் இயங்கி வந்த ‘ உதயம்’ தியேட்டர் வளாகம் மூடல்

Makkal Kural Official

அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாக தகவல்

இயக்குனர் கே. சண்முகசுந்தரம் அறிவிப்பு

சென்னை, ஜன.1- சென்னையில் அசோக்நகர் – கே.கே.நகருக்கு முகவிலாசம் எழுதிய பிரபல ‘உதயம்’ தியேட்டர்கள் இன்று (1ந் தேதி) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. அதற்கான அறிவிப்பை உதயம் குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரான கே.சண்முகசுந்தரம் வெளியிட்டார்.

உதயம் தியேட்டர் வளாகம் இடிக்கப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை ‘காசா கிராண்ட்’ பிரபல கட்டுமான நிறுவனம் கட்டவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

41 ஆண்டுகளாக ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு இடமாக இருந்து வந்த உதயம் உள்ளிட்ட 4 தியேட்டர்களும் மூடப்படுவது ரசிகர்களுக்கு குறிப்பாக தென்சென்னை ரசிகர்களுக்கு பெருத்த வேதனையைத் தந்துள்ளது.

ஒரு படம் ரிலீஸ் ஆனாலே போதும், உதயம் தியேட்டர் வளாகம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். கே.கே.நகரையும், அசோக் நகரையும், ஜாபர்கான்பேட்டையையும், மேற்கு மாம்பலத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது உதயம் தியேட்டர்.

தியேட்டர் மூடப்படுவது குறித்து ‘உதயம்’ குழுமத்தின் இயக்குனர் கே.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

என் பெரியப்பா நாராயணபிள்ளை தனது சகோதரர்கள் சுப்பிரமணியம், கருப்பசாமி, பரமசிவம், சுந்தரம், கல்யாணசுந்தரம் (எனது தந்தை) ஆகியோருடன் நெல்லையில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தார். பல்வேறு தொழில்கள் செய்து பணம் சேர்த்து, சென்னை அசோக்நகரில் 1979-ம் ஆண்டு 26 கிரவுண்ட் நிலம் வாங்கி, 1983-ம் ஆண்டில் ஒரு தியேட்டர் கட்டினார். எங்கள் பூர்வீகம் நெல்லை ராதாபுரத்தில் உள்ள உதய்ப்பூர் என்பதால், தியேட்டருக்கு உதயம் என்று பெயரும் சூட்டினார்.

ரஜினி, பாரதிராஜா, விஜய்க்கு பிடித்தது

உதயம் தியேட்டரில் முதன்முதலில் ரிலீசான படம் ரஜினிகாந்தின் ‘சிவப்பு சூரியன்’ ஆகும். அதன்பிறகு கமல்ஹாசனின் ‘சட்டம்’ படம் திரையிடப்பட்டது. 1985-ம் ஆண்டில் சூரியன், சந்திரன் என்ற தியேட்டர்களும், 2003-ல் மினி உதயம் தியேட்டரும் உருவானது. உதயம் திருமண மண்டபமும் கட்டப்பட்டது.

ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த தியேட்டரில் உதயமும் ஒன்று. ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே, ‘உதயமில் ரிலீஸ் ஆகுதா…’ என்று கேட்பார். அதேபோல இயக்குனர் பாரதிராஜாவும் பிரியப்படுவார். விஜய் அடிக்கடி வந்து படம் பார்ப்பார். ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை இந்த 41 ஆண்டு பயணத்தில் ஆயிரக்கணக்கான படங்கள் திரையிடப்பட்டு உள்ளது.

குடும்ப சூழல் காரணமாக உதயம் தியேட்டரை மூடுவது என்ற கடினமான முடிவை எடுத்தோம். முன்னணி கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் உடன் ‘கூட்டிணைவு ஒப்பந்தம்’ என்ற அடிப்படையில் கைகோர்த்தோம். கடந்த 30-ந்தேதியுடன் தியேட்டரை மூடிவிட்டோம். உரிம ஆவணங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.

உதயம் தியேட்டரில் ஓடிய கடைசி படம், ‘புஷ்பா–-2′. தியேட்டரில் வேலைபார்த்த அனைத்து பணியாளர்களையும் மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளோம். விரைவில் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி’’.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் இதுவரை சுமார் 50 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மயிலாப்பூர் லஸ் கார்னரில் அமைந்துள்ள பழமையான காமதேனு தியேட்டரும் இடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *