செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 1,251 மாணவர்களுக்கு பட்டங்கள்: கவர்னர் பன்வாரிலால் வழங்கினார்

Spread the love

சென்னை, டிச.4-

அண்ணா பல்கலைக்கழகத்தின் 40-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 1,251 மாணவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், உயர்க்கல்வி துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வரவேற்புரையாற்றினார்.

சீரான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ககன்தீப் காங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா, பதிவாளர் கருணாமூர்த்தி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் 1,180 பேருக்கு முனைவர் பட்டமும், பல்கலைக்கழக துறை சார்ந்த கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பட்டப்படிப்பில் முதல் தரவரிசையில் இடம்பெற்ற 71 பேருக்கு தங்க பதக்கத்துடன் கூடிய பட்டத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக வழங்கினார்.

நேரடியாக பட்டம் பெற்றவர்களை தவிர ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 696 பேர் இளநிலை பட்டமும், 19 ஆயிரத்து 719 பேர் முதுநிலை பட்டமும் தபால் மூலம் பெறுகின்றனர். ஆக மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 666 பேர் பட்டம் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் கல்வியை வழங்குவது ஜெயலலிதா அரசின் நோக்கம். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2018 19ம் ஆண்டின் அறிக்கையில் தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறது.

புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் கொண்டு வந்ததன் மூலம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு உயர்வான நிலையை பெற்றுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை சராசரியாக 26.3 சதவீதம் ஆக உள்ளது. 2018 19ல் தமிழ்நாடு இதில் 49 சதவீதத்தை எட்டி இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார்ந்த சொத்தாக ஆளில்லா விமானம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த வான்வெளி ஆராய்ச்சி போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் பங்குபெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத காடுகளில் வான்வெளி விமானம் மூலம் மருத்துவ உதவி சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

நமது சமூகத்தில் உணவு பசியை விட, அன்பு பசி தான் அதிகம். எனவே அன்பும், அறனுமே நாம் பெற்ற கல்வியின் பயனாக இருக்க வேண்டும். வேறொன்றையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். விரும்பும் வேலை கிடைக்காமல் போகலாம், தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும். அதற்கு நம்பிக்கை வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இது நமக்கு பெருமை ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *