செய்திகள்

ஆள் மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மனை அபகரிப்பு: 4 பேர் கும்பல் கைது

சென்னை, பிப். 19–

ரூ. 1 கோடி மதிப்புள்ள மனையை ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்த 4 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அண்ணாநகர், 9வது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ரத்தினம் குணம் ராஜேந்திரன் (வயது 70). இவருக்கு சொந்தமாக சுமார் 3,040 சதுர அடி கொண்ட காலி மனை மாதவரத்தில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். இதனை அவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து கிரயம் பெற்று அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை சென்னை திருவொற்றியூரிலுள்ள கிருஷ்ணன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் ராஜேந்திரன் பொதுஅதிகார ஆவணம் கொடுப்பது போன்று ஒரு போலியான ஆவணத்தை 2017–ம் ஆண்டு உருவாக்கியுள்ளார்.

அதன் மூலம் ராமச்சந்திரன் அவருடைய அண்ணன் வானமாமலை என்பவருக்கு அதே ஆண்டு ஒரு கிரய ஆவணம் செய்து கொடுத்துள்ளார். அதன் பின்னர் வானமாமலை அந்த கிரய ஆவணத்தை அண்ணாநகரிலுள்ள ரெப்கோ வங்கி கிளையில் அடமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக ரத்தினம் குணம் இராஜேந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ராமச்சந்திரன் போலியான பொது அதிகார ஆவணம் ஏற்படுத்துவதற்காகவே மாதவரத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவரை ராஜேந்திரன் போன்று ஆள்மாறாட்டம் செய்தும் பின்னர் கிரயம் பெற்ற வானமாமலை என்பவர் அந்த போலியான கிரய ஆவணத்தில் சூர்யா மற்றும் அசோக் குமார் ஆகியோர் சாட்சிகளாக இருந்துள்ளனர்.

பின்னர் அந்த போலி ஆவணத்தை அண்ணாநகரிலுள்ள ரெப்கோ வங்கி கிளையில் அடமானம் வைத்து பணம் ரூ.75 லட்சம் கடன் பெற்று அதை அவர்களின் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார்கள். இதுபோன்ற விவரங்கள் தெரியவந்தன. அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட மாதவரத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி (வயது 55), திருவொற்றியூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (41), அசோக் குமார் (வயது 43), திருவொற்றியூர் வானமாமலை (43) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 4 பேரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *