செய்திகள்

சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டாக மாற்றிய 4½ லட்சம் பேர்: விலையில்லா அரிசி வழங்க அரசுக்கு ரூ.304½ கோடி கூடுதல் செலவு

Spread the love

சென்னை, மார்ச் 20–

சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டாக 4½ லட்சம் பேர் மாற்றியுள்ளனர். அவர்களுக்கு விலையில்லா அரிசி வழங்க தமிழக அரசுக்கு ரூ.304½ கோடி கூடுதல் செலவாகும் என்று சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் அர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு இன்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அளித்த பதிலுரையில் கூறியிருப்பதாவது:–

விலையில்லா அரிசி தந்து, பசியில்லாத தமிழகத்தை உருவாக்கினார் ஜெயலலிதா. இதன்படி 1 கோடியே 96 லட்சத்து 7 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதந்தோறும் சராசரியாக 33 கோடி கிலோ அரிசி விலையில்லாமல், வழங்கப்பட்டு வருகிறது.

4 லட்சத்து 51 ஆயிரத்து 614 குடும்ப அட்டைதாரர்கள், தங்களது சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொண்டு விலையில்லா அரிசி பெற்று மனம் நிறைவுடன் இருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு ஆகும் கூடுதல் செலவு 304 கோடியே 56 லட்சம் ரூபாய் ஆகும்.

ஜெயலலிதாவால் மத்திய அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1.10.2002-முதல் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பகுதி மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு 2029 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 18 லட்சத்து 38 ஆயிரத்து 262 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் 15 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இ–கொள்முதல் மூலம் 3¼ லட்சம் பேர் பலன்

தற்பொழுது இ–கொள்முதல் திட்டம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை 3,476 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது, இதில் தமிழக அரசு வழங்கிய ஊக்கத்தொகை 116 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 133 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. 2011 முதல் பிப்ரவரி 2020 வரை 8 லட்சத்து 31 ஆயிரத்து 598 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 8 லட்சத்து 5ஆயிரத்து 288 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டள்ளது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம்.

இன்று 2 கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 394 குடும்ப அட்டைகள் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது. எனவேதான் நம்முடைய மாநிலத்தில் பொது விநியோகத் திட்டம், மற்ற மாநிலங்கள் போட்டி போடமுடியாதபடி, வெளிப்படைத் தன்மையோடும், உயிரோட்டத்தோடும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2 கோடி பேருக்கு பொங்கல் பரிசு; மகிழ்ச்சி

பொங்கல் பரிசோடு, உழவர் பண்டிகை உற்சாகம் பெற்றது. அரிசி கொடுத்தார், இனிக்கும் சர்க்கரை கொடுத்தார், எறும்பூரும் கரும்பு கொடுத்தார், ஏலமும், முத்திரி திராட்சையும் சேர்த்துக் கொடுத்தார். இதற்கும் மேலாக, ஆயிரம் ரூபாயை அள்ளிக்கொடுத்தார். இதற்காக முதலமைச்சர் 2,363.13 கோடி ரூபாயை ஒதுக்கியும் கொடுத்தார். இதனால் 1 கோடியே 98லட்சத்து 41 ஆயிரத்து 149 குடும்பங்கள் ஆனந்தமாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அரிசி கடத்தல்: 71 ஆயிரம் வழக்கு; 48500 பேர் கைது

மக்களுக்கு சேரக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா. 2011 முதல் இது வரை 70,999 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 48,536 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 1,122 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கட்டுமானம்

2011 வரை 12.41 லட்சம் மெ.டன் ஆக இருந்த கிடங்குகளின் கொள்ளளவை, கடந்த 9 ஆண்டுகளில் 22.25 லட்சம் மெ.டன்னாக உயர்த்தியது அம்மாவின் அரசு. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1,139 கோடி ரூபாய்.

இதேபோல், சைலோ சேமிப்புகலன்கள், நியாயவிலை அங்காடிகள், நெல் கொள்முதல் கட்டிடங்கள், உலர் கலங்கள், அலுவலக கட்டிடங்கள் இவைகளுக்காக 400.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவுற்றும், நடைபெற்றும் வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தர்கள், எடையாளர்கள் பணி நிரந்தரம்

2011 முதல் 2019 வரை 2,150 பருவ கால பட்டியல் எழுத்தர்களும், 1,171 எடையாளர்களும், பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணியின் போது மரணமடைந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், எடையாளர் பணி நிலையில் 330 நபர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *