காரமடை, மே 20–
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், தனது சொந்த ஊரான காரமடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 37). பெங்களூருவை சேர்ந்தவர். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
ரம்யாவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் காரமடை ஆகும். வெங்கடேசும், ரம்யாவும் ஐ.டி. நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துள்ளனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து பால்கனி கூரையில் 7 மாத பெண் குழந்தை திடீரென தவறி விழுந்தது. குழந்தை அங்கிருந்து நழுவி கீழே விழுந்து விடும் நிலையில், அக்கம், பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக குழந்தையை மீட்டனர். திக்…திக்.. திகில் காட்சிகளுடன் அரங்கேறிய இந்த சம்பவம் அப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னையில் இருந்த ரம்யா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் காரமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரம்யா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.