செய்திகள்

4 மாநில ஏ.டி.எம். கொள்ளையன் போடியில் கைது

தேனி, மார்ச் 29–

4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையன் போடியில் கைது செய்யப்பட்டான்.

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவனுக்கு திருமணமாகி 2 குழந்தைதகள் உள்ளனர். இவன் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது. ஏ.டி.எம். மையங்களில் நின்று கொண்டு அங்கு வரும் கிராமப்புற பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் பணம் எடுத்து தருவதாக அவர்களது கார்டை வாங்கி அந்த பணத்தை திருடிச் சென்றார்.

இவன் மீது தேனியில் 3 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3, ராஜபாளையத்தில் 2, வாலந்தூரில் 2, செக்காணூரணியில் 2, திருமங்கலத்தில் 3, சென்னையில் 1, ஆந்திராவில் 2, கேரளாவில் 1, கர்நாடகாவில் 4 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் தேடி வந்தனர். இவன் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.

கடைசியாக அவர் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவரது புகைப்படத்தை கைப்பற்றி தேனி உள்பட பல்வேறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் போடி வந்து தம்பிராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர். 4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *