செய்திகள்

4 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

Makkal Kural Official

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவையிலிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார்

ஊட்டி, நவ. 27– 4 நாள் அரசு முறைப் பயணமாக புதுடெல்லியிலிருந்து கோவை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. புதுடெல்லியிலிருந்து இன்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். காலை 9 மணிக்கு கோவை வந்த குடியரசுத் தலைவரை தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு, கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீலகிரி மலையில் நிலவும் கடும் மேகமூட்டத்தின் காரணமாக கோவையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு புறப்பட்டார். துப்பாக்கி ஏந்த போலீஸ் பாதுகாப்புடன் கார் சென்றது. கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து காளப்பட்டி சந்திப்பு, மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக உதகைக்குச் சென்றடைந்தார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து உதகையில் உள்ள ராஜ்பவனில் குடியரசு தலைவர் தங்குகிறார்.

நாளை (வியாழக்கிழமை) ஊட்டியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை அவர் சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வரும் 30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். இதன் பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி குன்னூர் ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பெண்களுடன் உரையாடல் நடத்துகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *