போஸ்டர் செய்தி

4 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றி தேடி தாருங்கள்

சென்னை, மே.15–
அம்மா வழியில் நடைபெறும் அம்மாவின் அரசு தொடர்ந்து வெற்றி நடைபோட, அனைத்து மக்கள் நல திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றிட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
துறைவாரியாக அரசு செய்துள்ள சாதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து முதன்மை இடத்தில் உள்ளது என்று புள்ளி விவரங்களுடன் எடுத்து கூறியுள்ள முதலமைச்சர் சாதனைகளுக்கு மத்திய அரசின் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளதையும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றுள்ள புரட்சித் தலைவி அம்மாவின் வழியில், தமது தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம், பணிக்குச் செல்லும் மகளிர்க்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி ரூ. 2,000 ஆகிய திட்டங்கள் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.
விருதுகள்
மேலும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்ததற்கான முதன்மை விருது, உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்தமைக்கான மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது, சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ் நாட்டிற்கு நல் ஆளுமைக்கான விருது, பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கியதற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது கழக அரசு. மேலும், அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.
துறைகள் வாரியாக சாதனைகள் விவரம்
பொதுப்பணித் துறை
காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அம்மா வழியில் செயல்படும் இவ்வரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளினால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 3,024 ஏரிகள் மற்றும் குளங்கள் ரூ. 429 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்குப் பின்பு தூர்வாரப்பட்டுள்ளது.
கொங்கு மண்டல விவசாயிகளின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 427.76 கோடி மதிப்பீட்டில் ஆதனூர் – குமாரமங்கலத்தில் கதவணையும், ரூ.387 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் புதிய கதவணையும் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் ரூ.2,962 கோடி மதிப்பீட்டிலும், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ரூ.750 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது. 70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு 250 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 202 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, 20 புதிய தொடக்கப் பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் விரைவான குறை தீர்வுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2,437 ஆசிரியர்கள் மற்றும் 793 ஆசிரியரல்லாதோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை
ஏழை, எளிய மக்களுக்கும் தரமான உயர்தர சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவி அம்மாவால் கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இதுவரை, ரூ. 2,127.17 கோடி செலவில் 13.90 லட்சம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
‘‘108″ அவசர கால ஆம்புலன்ஸ் திட்டத்தில் 6.20 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 24.55 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். ரூ.1,634 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.91 கோடி செலவில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் ரூ. 16.11 கோடி செலவில் குழந்தைகள் கேத் லேப் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தாய் சேய் நல வாகன சேவை ‘‘102″ தொடங்கப்பட்டுள்ளது.
14 லட்சம் பேருக்கு
மகப்பேறு உதவி
ரூ. 60 கோடி செலவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 229.46 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 13.75 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1,113.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது. ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ. 2,066 கோடி மதிப்பீட்டில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 1,340 சாலைகள் மற்றும் 61 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50.90 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ. 9,151 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 11,600 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.193.63 கோடி செலவில் 87,205 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.252.50 கோடி செலவில் மேலும் ஒரு லட்சம் மகளிருக்கு வழங்கப்படும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3,27,552 வீடுகள் ரூ. 5,568.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. அரசு நடுநிலைப் பள்ளிகளில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.198.30 கோடி ஒதுக்கீட்டில் 78,960 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 3,473 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திருநங்கைகளுக்கு
மானியம்
பெண்களுக்கு உதவ இலவச தொலைபேசி சேவை எண். ‘181’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருநங்கைகள் சொந்தத் தொழில் தொடங்கும் நிதிக்கான மானியம் ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ‘‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக அகில இந்திய அளவில் தமிழ் நாடு சிறந்த மாநிலமாகவும், சிறந்த மாவட்டத்திற்கான தேசிய விருது திருவண்ணாமலை மாவட்டமும் பெற்றுள்ளன.
முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.6.70 கோடி செலவில் சிறப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு ரூ.1,200 எனவும், குழந்தைகளுக்கு ரூ.900 எனவும் உணவூட்டுத் தொகை மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 1,92,119 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 50,000 ரொக்கமும், பட்டப் படிப்பு அல்லாதவர்களுக்கு ரூ. 25,000 உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்பு, பால்வளம்
கிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பை வழங்கி பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, ரூ. 62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ.315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. ரூ. 396 கோடி மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய பல்துறை, உறைவிந்து மற்றும் பல்நோக்கு நவீன கால்நடை பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புறக்கடைக் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 68.75 கோடி செலவில் 77,000 பெண் பயனாளிகளுக்கு 199 கறிக்கோழிப் பண்ணைகள் மற்றும் 2,861 நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் ஆகிய வெளிநாடுகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி துறைமுகங்கள்
மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டு, 3,16,183 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.158 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மீன்பிடிப்பு குறைந்த காலத்திற்கு நிவாரண உதவி ரூ. 5,000 வீதம் 2,72,368 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.136.18 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆபத்துக் காலங்களில் மீனவர்களைக் காக்க, ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் வழங்க சேட்லைட் போன், நாவிக் (NAVIC) மற்றும் நாவ்டெக்ஸ் (NAVTEX) என்ற தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ. 420 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் ரூ.116 கோடி செலவில் கடல் அரிப்புத் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தித் துறை
விடுதலைப் போராட்டத் தியாகிகள், தமிழ்ச் சான்றோர் மற்றும் நாட்டுக்கு உழைத்த நல்லோரின் நினைவுகளைப் போற்றி விழா எடுத்தல், சான்றோர் வாழ்ந்த இல்லங்களைப் பராமரித்து அவர்தம் நினைவாக நினைவுச் சின்னங்கள் உருவாக்கிப் போற்றுதல், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பக் கலைகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து, நாளைய திரைக் கலைஞர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் செய்தித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போயஸ் தோட்ட
நினைவு இல்லம்
புரட்சித் தலைவி அம்மா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.50.8 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்மா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ.20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ. 2.52 கோடி செலவில் சென்னை காமராசர் சாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவைப் போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமியின் நினைவாக நினைவுத் தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு கன்னியாகுமரியில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்,
நினைவு மண்டபங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைக்காரன் புதூரில் வி.கே. பழனிசாமி கவுண்டருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், திருச்சியில் சர். ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகருக்கு குவிமாடத்துடன் திருவுருவச் சிலை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேர்களை கௌரவிக்கும் வகையிலும், அந்நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையிலும் நினைவு மண்டபம் என சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் துவக்கப்படவுள்ளன. அதே போல், பத்திரிகையாளர் நலன் காத்திட பத்திரிகையாளர் ஓய்வூதியமாக மாதம் ரூ. 10,000-மும், குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 5,000-மும் வழங்கப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
அண்ணா தி.மு.க. அரசால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா 32 மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அவ்விழாக்களின் மூலம் 5,744 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3,214 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், 5,158 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற 2,370 புதிய திட்டப் பணிகள் தொடங்கியும் வைக்கப்பட்டன. மேலும் 5,475 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் 8,31,527 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. தமிழ் நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக 568 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
போக்குவரத்துத் துறை
போக்குவரத்து, பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாடு வலுவான பேருந்து போக்குவரத்து அமைப்பைப் கொண்டுள்ளது. அவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை வழங்குவதுடன் அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்கின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனுக்காக 13–வது ஊதிய ஒப்பந்தம் கழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரூ. 140 கோடி செலவில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
14 ஆயிரம் பஸ்கள்
ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் ரூ. 5,890 கோடி செலவில் 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 புதிய மின் பேருந்துகள் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ரூ. 813.02 கோடி அரசு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக திகழ்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், குறைவான முதலீடு, புதுமையான முயற்சி, பிராந்திய வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, கிடைக்கும் வளத்தை ஒன்று திரட்டுவது மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பு அளிக்கின்றன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் மட்டும் 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 32,206 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 32,586 பயனாளிகள் அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ரூ. 191.84 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 14.62 கோடி அளவில் 3% பின்முனை வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6,637 பயனாளிகளுக்கு ரூ. 40.48 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ. 49,465 கோடி முதலீட்டில் 4,14,363 நிறுவனங்கள் வாயிலாக 26.47 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கிராமத்தில் புதிய தேயிலை தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திட்டம் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறை
சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் – I முழுமையடைந்து 45 கி.மீ. மெட்ரோ ரெயில் வழித் தடங்களில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 118.9 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் – IIக்கு ரூ. 69,180 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நகருக்கு மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையம் முதல் காஞ்சிபுரம் மாவட்டம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து முனையம் வரை மெட்ரோ ரெயில் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிதித் துறை
ரூ. 92.48 கோடி செலவில் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 27,150 பேர் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி திருத்திய ஊதியம் ரூ.14,719 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பணிகள் செவ்வனே நடைபெற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை
இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், தமிழ்நாடு வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மற்றும் வெளிப்படையான பதிவு நிர்வாகத்திற்கு ஸ்டார் 2.0 திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஆவணப் பதிவு நடைமுறையினை முற்றிலும் கணினிமயமாக்கும் நோக்குடன் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை
இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில், அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பில், திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயனடைந்து வருகின்றனர். சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை ரூ. 9.73 கோடி வழங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறும் திட்டத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக, ஆசிய மற்றும் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை ரூ. 8.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ரூ. 14.66 கோடியில் காஞ்சிபுரத்தில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. ரூ. 17.35 கோடி செலவில் வேலூரில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது. ரூ. 10 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இறகுப் பந்து முதன்மைநிலை மையம் மற்றும் அகாடமி அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ. 5.53 கோடியில் உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ. 13.12 கோடி செலவில் உயிர் எந்திரவியல் முதன்மை நிலை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை
கொத்தடிமை முறையிலிருந்து 558 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ரூ. 93.15 லட்சம் நிவாரண உதவி வழங்கப் பட்டுள்ளது. 8,48,332 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ. 347.91 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு 1.1.2019 முதல் தடை செய்யப் பட்டுள்ளது. வேட்டைத் தடுப்பு காவலர்களின் தொகுப்பூதியம் ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வன உயிரின மோதல்களில் உயிரிழக்க நேரிடும் வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 26 கோடி செலவில் ஏரிகளின் சூழல் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 2 கோடி செலவில் சென்னை தண்டையார்பேட்டையில் அம்மா சுற்றுச் சூழல் பூங்கா” அமைக்கப்பட்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்பவியல் துறை
திருச்சியில் ‘‘தமிழ்நாடு பேரிடர் தரவு மீட்பு மையம்” ரூ. 59.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 21.39 கோடி செலவில் எல்காட் மற்றும் சி–டாக் வாயிலாக தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. ரூ. 23 கோடி செலவில் சென்னையில் நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் ரூ. 19.72 கோடி செலவில் “தகவல் தொழில்நுட்பப் பூங்கா” அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 8.50 கோடியில்
50 இடங்களில் அம்மா ஒய்–பை (WIFI) திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 659 அரசு இ–சேவை மையங்கள் வாயிலாக 96,78,065 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை
இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க ஆணையிடப்பட்டுள்ளது. ரூ. 91.02 கோடி செலவில் 79 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விலையில்லா வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் பெறுவதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 72,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரிய நிருவாக மானியம் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 3 கோடி செலவில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69% இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தி சமூக நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உலமாக்கள் ஓய்வூதியம் ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வன்னியர் குல ஷத்திரிய அறக்கட்டளை நிர்வகிக்க இந்திய ஆட்சிப் பணி (ஓய்வு) அதிகாரி தலைமையில் உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் இனப் பிரிவுகளில் உள்ள குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறை
விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.13,000 ஆகவும், வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 6,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயிர்நீத்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் குடும்ப ஓய்வூதியமாக இரட்டைக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை இளங்கலை, முதுகலை வரை ரூ. 10,000 ஆகவும், தொழில்சார்ந்த பட்டமேற்படிப்புகளுக்கு ரூ. 25,000–ஆகவும் பல்தொழில்நுட்ப படிப்பிற்கு ரூ. 20,000 ஆகவும், தொழில் பயிற்சி படிப்பிற்கு ரூ. 10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு 11 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. முகாம் வாழ் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ. 6,000–ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து நலத்திட்டங்களும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இன்னல்களுக்கு உட்பட்ட 119 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டி சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆகியோரின் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் நலத்திட்டங்கள்
தொடர்ந்து கிடைக்க…
மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு தொடர்ந்து வெற்றி நடை போடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அண்ணா தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, புரட்சித் தலைவி அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு, வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *