இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு
புதுடெல்லி, மே.17-
நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்றும், 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் அடங்கும்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ந்தேதி 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், 3-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதியும், 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதியும் தேர்தல் நடைபெற்றது.
அதன்படி இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 23 மாநிலங்களை உள்ளடக்கிய 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஞ்சியுள்ள 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 20, 25 மற்றும் ஜூன் 1ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தியாவில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இது உலக அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிக பட்சமாகும். அந்த 97 கோடி வாக்காளர்களில், இதுவரை 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது சில நாடுகளின் மக்கள் தொகையைவிட, இந்தியாவில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்
இந்த 4 கட்டங்களிலும் மொத்தமாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதமும், 2ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதமும், 3ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது. 4ம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக 69.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள 3 கட்ட தேர்தலிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாக்கு பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கமிஷனின் வேண்டுகோளின் பேரில், பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வமாக பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிக்கும் நாள் விடுமுறை அல்ல, ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதற்குப் பெருமை சேர்க்கும் நாள் என்பதை உணர்ந்து வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.