செய்திகள்

4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதி கைது

திருவண்ணாமலை,மே.29–

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருகலைக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையின் உரிமையாளர் கவிதா (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து கவிதா அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கவிதா 10-ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த மருத்துவ உபகரணங்கள், கருக்கலைப் பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டு பேன்ஸி ஸ்டோருக்கு சீல் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *