செய்திகள்

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட சிலைகளை திரும்ப வழங்கிய அமெரிக்கா

Makkal Kural Official

அதிபர் பிடனும், மோடியும் சிலைகளை பார்வையிட்டனர்

வாஷிங்டன், செப். 22–

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 300 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க நாடான இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். இதனையடுத்து அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட சிலைகளை பல நாடுகள் பறிமுதல் செய்து வைத்துள்ளன. அவற்றை திரும்ப பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்கா அரசு பல சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்து உள்ளது.

578 சிலைகள் மீட்பு

தற்போது பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 297 பழங்கால சிலைகளை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 578 சிலைகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளன. சிலைகளை இந்தியாவிடம் திருப்பி கொடுத்ததில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

டெலவாரே நகரில் இந்த சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இங்கு அதிபர் பிடனும், பிரதமர் மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தனர். பிறகு, இந்த சிலைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, முறைப்படி இந்த சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மோடி நன்றி

இதற்கு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

இது, கலாச்சார இணைப்பை ஆழப்படுத்துவதுடன், கலாச்சார சொத்துகள் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துகிறது. விலை மதிப்பு இல்லாத 297 சிலைகளை திருப்பி கொடுத்ததற்காக அமெரிக்காவிற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ஒப்படைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து திருடப்பட்டு உள்ளன. இந்த சிலைகள் கற்கள், மெட்டல், மரம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டவை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *