செய்திகள்

இயற்கை மருத்துவம், யோகா படிப்பில் காலியாகவுள்ள 597 இடங்களுக்கு 11–ந்தேதி 3வது கட்ட கலந்தாய்வு

சென்னை, மார்ச் 5–

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்பில் காலியாகவுள்ள 597 காலியிடங்களை நிரப்புவதற்காக 3-வது கட்ட நேரடி கலந்தாய்வு சென்னையில் வரும் 11–ந்தேதி நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் புதிதாக விண்ணப்பித்தும் பங்கேற்கலாம்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இயற்கை மற்றும் யோகாமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஒரு அரசு கல்லூரி மற்றும் 17 சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 597 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான 3-ம் கட்ட நேரடி கலந்தாய்வு வரும் 11–ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தின் தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள 17 சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன.

முதல் 2 கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.500-ஐ சேர்த்து கலந்தாய்வு நடைபெறும் 11ந்தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தேர்வுக்குழு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு கலந்தாய்வுக்கான மெரிட் பட்டியல் வெளியிடப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வு நடத்தப்படும். தகுதியுள்ள மாணவர்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வு கட்டணம் ரூ.500, கல்விக்கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற பின் மார்ச் 15–ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *