செய்திகள்

மயிலாடுதுறை 38–வது புதிய மாவட்டமாக உதயம்: எடப்பாடி துவக்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரிப்பு

மயிலாடுதுறை 38–வது புதிய மாவட்டமாக உதயம்:

எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை, டிச.28–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (28–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் கடந்த 24.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110–ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடையவேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38–-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 38-–வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கிட 7.4.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்திற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, புதிய மாவட்டம் தோற்றுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அரசாணை (நிலை) எண் 796, நாள் 28.12.2020 இன்று வெளியிடப்பட்டது.

4 வருவாய் வட்டங்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள், 15 வருவாய் குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் நிருவாக ஆணையர் க.பணீந்திரரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *