செய்திகள்

36 வது இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள்: 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெங்கலம் என தமிழ்நாடு 58 பதங்கம்

தமிழ்நாட்டின் ஆண், பெண்கள் கூடைப்பந்து அணிகளுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள்

அகமதாபாத், அக். 7–

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் ஆண்கள் கூடைப்பந்து அணி தங்கப்பதக்கம் வென்று அசத்திய நிலையில், பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 29 ந்தேதி தொடங்கி அக்டோபர் 12 ந்தேதி வரையில் நடக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ராணுவத்தின் சர்வீசஸ் அணி ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இதில் இடம் பெற்றுள்ளனது.

தமிழ்நாட்டுக்கு தங்கம்

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் (5 பேர் ஆட்டம்) இறுதி சுற்றில் தமிழ்நாடு 97-89 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தேசிய விளையாட்டு ஆண்கள் கூடைப்பந்தில் 2002-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அணி முதல்முறையாக மகுடம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோல் தமிழ்நாட்டின் பெண்கள் கூடைப்பந்து அணிப் பிரிவில் தெலுங்கானாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 62-67 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இதனால் தமிழ்நாடு பெண்கள் கூடைப்பந்து அணி வெள்ளிப்பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டது. ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில், தமிழ்நாட்டின் அரிகரன்-ரூபன் ஜோடி, கேரளாவின் ரவிகிருஷ்ணா-சங்கர் ஜோடியிடம் போராடி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

58 பதக்கங்களுடன் தமிழ்நாடு

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் ராணுவத்தின் சர்வீசஸ் அணி 41 தங்கம், 29 வெள்ளி, 26 வெங்கலம் உள்பட மொத்தம் 96 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, அரியானா மாநிலம் 29 தங்கம், 23 வெள்ளி, 20 வெங்கலம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 25 தங்கம், 25 வெள்ளி, 46 வெங்கலம் என மொத்தம் 96 பதக்கங்களை வென்று 3 வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு அணி இதுவரையில் 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெங்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 58 பதக்கங்களை வென்று 4 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 5 வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசம்18 தங்கம், 13 வெள்ளி, 12 வெங்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கம் வென்ற மாநிலங்களில் கோவா, மிசோரம், சிக்கிம் ஆகியவை, தலா ஒரு வெங்கலப் பதக்கத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் இன்னும் வெற்றிப் பட்டியலையே தொடங்கவில்லை. இன்னும் 5 நாட்கள் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *