செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 34 புதிய வகை பயிர் ரகங்கள் அறிமுகம்: எடப்பாடி பழனிசாமி தகவல்

சென்னை, ஜன. 8–

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 34 புதிய வகை பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட பயிர் ரகங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ராமசந்திரன் காலை பேசுகின்ற போது, விவசாயிகளுக்கு புதிய ரக நெற்பயிரோ, தானியங்களோ அறிமுகப்படுத்தவில்லை என்று சொன்னார். இன்றைக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட பயிர் ரகங்களை சுருக்கமாக சொல்கிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில், நெற்பயிற்களில் 4 ரகங்களும், மணிலா பயிரில் 2 ரகங்களும், உளுந்து பயிரில் 2 ரகங்களும், கரும்பில் 3 ரகங்களும், வாழையில் 3 ரகங்களும், சூரியகாந்தி, சாமை, ஆமணக்கு, பூண்டு, உருளைக்கிழங்கு, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகிய பயிர்களில் தலா ஒரு ரகமும், இதரப் பயிர்களில் 13 ரகங்களும், ஆக மொத்தம் 34 புதிய ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இத்தகைய ரகங்களை விதைப் பெருக்கம் செய்து, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் புதிய ரகங்கள் கண்டுபிடித்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.புதிய நெல் ரகத்தை

கண்டுபிடிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

புதிய நெல் ரகம், புதிய தானிய வகைகளை கண்டுபிடிப்பதற்காக, அதிக விளைச்சல் தரக்கூடிய தானியத்தை கண்டுபிடிப்பதற்காக கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்திற்கு அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *