செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: 111 பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடம்

Makkal Kural Official

83 தங்கத்துடன் சீனா 2 வது இடம்; இந்தியா 69 வது இடம்

பாரீஸ், ஆகஸ்ட் 10–

33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், 33 தங்கத்துடன் மொத்தம் 111 பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்திலும் 33 தங்கத்துடன் 83 பதக்கங்களை வென்று சீனா 2 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 5 வெண்கலப் பதக்கம் ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 69 வது இடத்தில் உள்ளது.

உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் களை கட்டியுள்ளது. ஜூலை 26 ந்தேதி தொடக்க விழா நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 11 ந்தேதி வரையில் 16 நாட்கள் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக்கில், 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னர் 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் தான் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீசில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்கான போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் இருந்து வீரர்கள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கணைகள் கலந்து காெண்டுள்ளனர். இதில் டென்னிஸ், பாய்மரப் படகுப் போட்டி, தொடர் ஓட்டம், துப்பாக்கிச் சுடுதல் என தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு 69 வது இடம்

33 வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய 15 வது நாளான இன்று பிற்பகல் வரையில், அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என 83 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும், ஆஸ்திரேலியா 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும், ஜப்பான் 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் 4 வது இடத்திலும், பிரிட்டன் 14 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் 57 பதங்கங்களுடன் 5 வது இடத்தையம் பிடித்துள்ளது.

இதில் பிரான்ஸ் 14 தங்கம், 20 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 6 வது இடத்திலும், தென்கொரியா 13 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 28 பதங்கங்களுடன் 7 வது இடத்திலும், நெதர்லாந்து 13 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 8 வது இடத்திலும் ஜெர்மனி 12 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் 9 வது இடத்திலும் இத்தாலி 11 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் 10 வது இடத்திலும் உள்ளது.

கனடா 7 தங்கத்துடன் மொத்தம் 24 பதக்கமும், நியூசிலாந்து 6 தங்கத்துடன் மொத்தம் 15 பதக்கமும், ஹங்கேரி 5 தங்கத்துடன் மொத்தம் 15 பதக்கமும், உஸ்பெகிஸ்த்தான் 5 தங்கத்துடன் மொத்தம் 8 பதக்கமும், ஸ்பெயின் 4 தங்கத்துடன் மொத்தம் 15 பதக்கமும் வென்று 11 முதல் 15 இடங்களை பிடித்துள்ளது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்துடன் 69 வது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், கடைசி நிலையில் சாம்பியா, எகிப்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 8 நாடுகள் தலா ஒரு வெண்கலத்துடன் 80 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *