நியூயார்க், பிப். 18–
அமெரிக்காவில், 32.43 டாலருக்கு சாப்பிட்டு விட்டு 10,000 டாலர் டிப்ஸ் வழங்கிய வாடிக்கையாளரை கண்டு, பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெக்சிகனில், மேசன் ஜார் கஃபே எனும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் உணவருந்த வந்த மார்க் என்ற வாடிக்கையாளர், 32.43 டாலர் (சுமார் ரூ.2700) மதிப்பிலான உணவைச் சாப்பிட்டுவிட்டு, பில் கொடுக்கும் போது அதில் `டிப்ஸ்’ எனக் குறிப்பிட்டு 10,000 டாலரை (சுமார் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம்) சேர்த்து வழங்கியிருக்கிறார்.
இதைப் பார்த்து அதிர்ந்த உணவு பரிமாறிய பெண் ஸ்வீனி, இது உண்மைதானா எனத் திகைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, வெளியே சென்ற மார்க்கிடம் அந்தப் பணியாளர் இது தவறுதலாக எழுதப்பட்டதா? அல்லது உண்மைதானா எனவும், இதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.
10,000 டாலர் டிப்ஸ் ஏன்?
அப்போது மார்க், “அண்மையில் என் நண்பன் இறந்துவிட்டான். அவன் நினைவாகத்தான் இந்த டிப்ஸ் வழங்கினேன். அவனுடைய இறுதிச்சடங்கிற்காகத்தான் இந்த நகருக்கு வந்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த டிப்ஸ் பணம் அன்று பணி செய்த 9 பணியாளர்களுக்கும் 1,100 டாலர் எனப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய மற்றொரு பணியாளர் பைஜ் முலிக், “இது உண்மையில் பலரைப் பாதித்த கருணை செயல். என் கல்லூரி படிப்புக்காக வாங்கிய கடனில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுத்துவிட்டேன். அந்த நாளில் பணிசெய்த பல பெண்கள், கடின உழைப்பாளி தாய்மார்கள். அந்த தொகைக்குத் தகுதியானவர்கள்” என நெகிழ்ந்துள்ளார்.
டிப்ஸ் பெற்றுக்கொண்ட ஸ்வீனி, “எந்த நேரத்திலும் நீங்கள் கைகொடுத்து உதவி ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம். அது ஒரு சிறிய செயலாக இருந்தாலும் சரி, பெரிய செயலாக இருந்தாலும் சரி. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த 10,000 டாலர் சம்பாதிக்க எனக்குப் பல மாதங்கள் ஆகியிருக்கும்” எனக் கூறி உள்ளார்.